கிளோப்: லிவர்பூல் வீரர்கள் பொறுப்புடன் விளையாடினர்

கிளோப்: லிவர்பூல் வீரர்கள் பொறுப்புடன் விளையாடினர்

2 mins read
3612a91b-91de-44c4-9112-9f0fae47c1ec
முகமது சாலாவின் (சிவப்புச் சட்டை) இரட்டை கோலால் ஆர்சனலைச் சாய்த்தது லிவர்பூல். படம்: இபிஏ -

லிவர்பூல்: ஆர்சனலுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் கோல் போட வேண்டும் என்ற பேராசையோடும் ஆர்வத்தோடும் விளையாடிய லிவர்பூல் வீரர்களின் ஈடுபாட்டை பாராட்டியுள்ளார் அதன் நிர்வாகி யர்கன் கிளோப்.

"இன்றைய ஆட்டத்தில் என் வீரர்களிடம் ஆற்றல், பேராசை, ஆர்வம் என அனைத்தையும் காண முடிந்தன. "ஆர்சனல் போன்ற வலுவான குழுவுக்கு எதிராக விளையாடும்போது இவை அனைத்தும் தேவையான ஒன்று. "ஆர்சனல் ஒரு கோல் போட்ட பிறகு முற்றிலும் மாறுபட்ட ஆட்டமாக இருந்திருக்கும். "ஆனால், கடைசி 10 நிமிட த்தின் போதும் நாங்கள் கிட்டதட்ட பாதி விழுக்காட்டிற்கும் மேல் ஆதிக்கம் செலுத்தி ஆட்டத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தோம். "அனைவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடினார்கள்," என்று வீரர்களைப் பாராட்டினார் கிளோப். ஜோயல் மேட்டிப் 41வது நிமிடத்தில் தலையால் முட்டி தள்ளிய பந்து, லிவர்பூலின் முதல் கோலானது.

பிற்பாதி ஆட்டத்தில் அதைச் சமன் செய்துவிடலாம் என்ற ஆர்சனல் நிர்வாகிய உனாய் எமிரியின் நம்பிக்கையை உடைத்து விட்டார் அக்குழுவின் புதுவரவான டேவிட் லூயிஸ். டேவிட் லூயிசின் தப்பாட்டாம் காரணமாக சாலாவிற்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. இதனால் லிவர்பூலின் கோல் எண்ணிக்கை இரண்டானது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் சாலா இன்னோர் கோலையும் போட எம்ரியின் கனவு எட்டாக்கனியானது. ஆர்சனல் கோல் எதுவும் போடாத நிலையில், மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய லுகாஸ் டொரேரியா ஆறுதல் கோல் போட்டார். கடைசி நேரத்திலும் லிவர்பூல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியதால், ஆர்சனல் வீரர்களால் கோல் எதுவும் போட முடியாமல் போனது. எனவே 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தன் சொந்த மண்ணில் ஆர்சனலை வீழ்த்தியது. இதன்மூலம் இப்பருவத்தில் இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் லிவர்பூல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேசமயம் லிவர்பூலின் சொந்த மண்ணில் ஆர்சனல் வீழ்வதும் தொடர்கதையாகியுள்ளது. கடந்த பருவத்தில் 5-1 என்றும் அதற்கு முந்திய பருவத்தில் 4-0 என்றும் இதே மைதானத்தில் ஆர்சனல் தோல்வியைத் தழுவியிருந்தது.