ஆண்டிகுவா: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"நான் நிறைய விஷயங்களைச் சரியாக செய்து வருகிறேன். இரண்டு இன்னிங்சிலும் நன்றாக பந்தடித்தேன்.
"ஆனாலும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது உண்மையிலேயே எனக்கு ஏமாற்றமளிக்கிறது.
"எனவே நான் இன்னும் கூடுதல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
"முதல் 60-80 பந்துகளை எதிர்கொள்ளும் போது இருக்கும் பொறுமையை 200-250 பந்து வரை கொண்டிருக்க வேண்டும். அதுதான் எனக்கும் அணிக்கும் நல்லது.
"அடுத்த ஆட்டத்தில் இருந்து நான் இதைக் கடைப்பிடிப்பேன்," என்று சொன்னார் ராகுல்.
முதல் இன்னிங்சில் 97 பந்துகளில் 44 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்சில் 85 பந்துகளை எதிர்கொண்டு 38 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தார் ராகுல்.
மயங்க் அகர்வால், புஜாரா ஆகிய இருவரும்கூட இரு இன்னிங்சிலும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்ட
மிழந்தனர். ரகானே, அணித் தலைவர் கோஹ்லி இருவரும் அரைசதம் எடுத்ததால், மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 260 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

