சென்னை: அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய வீரர் அம்பதி ராயுடு ஓய்வு முடிவைத் திரும்ப பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்தடிப்பாளர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடுவுக்கு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இதனால் அம்பதி ராயுடு அதிருப்தியில் இருந்தாலும் வீரர்கள் யாராவது காயம் அடையும் பட்சத்தில் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தவான், விஜய் ஷங்கர் காயத்தினால் விலகியபோதும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாததால் விரக்தியடைந்த அவர் அனைத்துவிதமானக் கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த அவரிடம் ஓய்வு முடிவு பற்றிக் கேள்வி எழுப்பியபோது "உலகக் கிண்ண அணியில் இடம் கிடைக்காததால் விரக்தியில் நான் அந்த முடிவை எடுத்தேன்.
"ஆனால் இப்போது அதைக் கடந்து சென்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதனால் ஓய்வு முடிவைத் திரும்பப்பெறுவது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்திடம் பேசி வருகிறேன். இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்," எனத் தெரிவித்துள்ளார்.

