நியூகாசல் எதிர்பாரா வெற்றி

நியூகாசல் எதிர்பாரா வெற்றி

2 mins read
c843f6cb-f648-47cc-99de-86eeb23e48ac
நியூகாசல் குழுவின் வெற்றி கோலைப் போடும் ஜோலின்டன் (இடது). பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க ஸ்பர்ஸ் தற்காப்பு ஆட்டக் காரரும் கோல் காப்பாளரும் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி -

லண்டன்: நியூகாசல் யுனைடெட் களமிறங்கும் ஆட்டம் எப்படி முடியும் என்று முன்னுரைப்பது சிரமம். சில சமயங்களில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் ஜாம்பவான்களையே புரட்டிப் போடும் நியூகாசல், சாதாரண குழுக்களிடம் தோல்வி அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இருப்பினும், இக்குழுவுக்கென்றே இருக்கும் பல விசுவாசமிக்க ரசிகர்கள் கொண்டாட்ட மழையில் நனையும் வகையில் நேற்றைய ஆட்டம் அமைந்தது. லீக்கின் வலிமைமிக்க குழுக்களில் ஒன்றான ஸ்பர்ஸ் குழுவை நியூகாசல் நேற்று சந்தித்தது. சொந்த ரசிகர்களுக்கு முன் விளையாடிய ஸ்பர்ஸ், மூன்று புள்ளிகளையும் வளைத்துப்போட்டு விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் நடந்தது வேறு. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் நியூகாசல் கோல் போட்டு எதிரணியை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஸ்பர்சின் பெனால்டி எல்லைக்குள் அனுப்பப்பட்ட பந்தை விரைந்து சென்று தமது கட்டுக்குள் கொண்டு வந்த நியூகாசலின் ஜோலின்டன், ஸ்பர்ஸ் தற்காப்பு ஆட்டக்காரர் தம்மை நெருங்குவதற்குள் மின்னல் வேகத்தில் பந்தை வலைக்குள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து, ஆட்டத்தைச் சமன் செய்ய ஸ்பர்ஸ் தீவிரமாக முயன்றது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஸ்பர்ஸ் ஆட்டக்காரர்கள் கோல் முயற்சியில் இறங்கியபோது அதற்குத் தடையாக நியூகாசலின் தற்காப்பு அரண் இரும்புத் திரையாகச் செயல்பட்டது.

அப்படியே தற்காப்பு ஆட்டக்காரர்களை மீறி ஸ்பர்ஸ் வீரரர்கள் வலை நோக்கி பந்தை அனுப்பினாலும் அதைத் தடுத்து நிறுத்தினார் நியூகாசலின் கோல்காப்பாளர் மார்ட்டின் டுபிராவ்கா. ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் ஸ்பர்சின் ஹேரி கேன், நியூகாசலின் பெனால்டி எல்லைக்குள் இருந்தபோது கீழே விழுந்தார். ஆனால் காணொளிப் பதிவை ஆராய்ந்த பிறகு தப்பாட்டம் ஏதும் நிகழவில்லை என்று நடுவர் முடிவெடுத்தார். எனவே, ஸ்பர்சுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இறுதியில் 1-0 எனும் கோல் கணக்கில் வாகை சூடிய நியூகாசல் மூன்று புள்ளிகளைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டது. இப்பருவம் தொடங்கி முதல் இரண்டு ஆட்டங்களில் ஆர்சனலிடமும் நார்விச் சிட்டியிடமும் தோற்ற நியூகாசல், அதன் புது நிர்வாகி ஸ்டீவ் புரூஸ் தலைமையின்கீழ் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மற்றோர் ஆட்டத்தில் போர்ன்மத் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வீழ்த்தியது.