ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

3 mins read

ஹெட்டிங்லி: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹெட்டிங்லியில் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா, ஆர்ச்சரின் அபார பந்துவீச்சால் 179 ஓட்டங்களில் சுருண்டது.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சைத் தொடங்கியது. பவுன்சர், ஸ்விங், சீம் எனப் பந்து வீச்சில் அசத்திய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தை 67 ஓட்டங்களில் சுருட்டினர்.

112 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலியா, மார்னஸ் லபுஷேனின் (80) சிறப்பான ஆட்டத்தால் 246 ஓட்டங்ள் குவித்தது.

இதனால் ஆஸ்திரேலியா

ஒட்டுமொத்தமாக 358 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததால், இங்கிலாந்து அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ் (7), ஜேசன் ராய் (8) சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

அடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் டென்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இலக்கை எட்டிவிடலாம் என இங்கிலாந்து நம்பியது. ஆனால், டென்லி 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து மூன்று விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 75 ஓட்டங்களுடனும் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று முன்தினம் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் மேலும் இரண்டு ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இங்கிலாந்துக்குச் சறுக்கல் ஏற்பட்டது. பேர்ஸ்டோவ் (36), பட்லர் (1), கிறிஸ் வோக்ஸ் (1) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் ஒரு பக்கம் பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ஓட்டங்கள் எடுத்திருந்து. கைவசம் ஒரு விக்கெட் இருந்த நிலையில் 73 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து அதன் வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டே இருந்தது.

சதம் அடித்த திருப்தியுடன் நின்றுவிடாமல் தமது அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றார் ஸ்டோக்ஸ்.

இறுதியில் அவர் பவுண்டரி அடித்து இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தார். இங்கிலாந்து அணி 125.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ஓட்டங்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 219 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 135 ஓட்டங்கள் குவித்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள்

உள்ளன.

டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச 'சேசிங்' இதுதான்.

இதற்கு முன்பு 1928-29ஆம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் 332 ஓட்டங்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்ததே இங்கிலாந்தின் அதிகபட்ச 'சேசிங்'காக இருந்தது.

டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது நான்காவது முறை.