ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்தியா கைப்பற்றியுள்ளது.
சிறப்பாக விளையாடிய இந்தியா 318 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது.
முதல் இன்னிங்சில் இந்தியா 297 ஓட்டங்களும் வெஸ்ட் இண்டீஸ் 222 ஓட்டங்களும் எடுத்தன.
அடுத்து 75 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து லோகேஷ் ராகுல் 38 ஓட்டங்களிலும் புஜாரா 25 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதன் பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு அணித் தலைவர் விராத் கோஹ்லியும் துணைத் தலைவர் ரகானேவும் கூட்டணி அமைத்து அணியைச் சரிவில் இருந்து காப்பாற்றினர்.
17 ஓட்டங்களில் இருந்தபோது 'கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பித்த ரகானே 48 ஓட்டங்கள் எடுத்து எல்.பி.டபிள்யூ. ஆகி இருக்க வேண்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் டிஆர்எஸ் வாய்ப்பைப் பயன்படுத்தாததால் ரகானே தப்பினார்.
நிதானமாக ஆடிய கோஹ்லியும் ரகானேவும் தங்களது அரை சதத்தைக் கடந்தனர். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கோலி 51 ஓட்டங்களுடனும் ரகானே 53 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் நான்காவது நாளான நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் தொடர்ந்து பந்தடித்தனர். வந்த வேகத்திலேயே அணித் தலைவர் விராத் கோஹ்லி (51 ஓட்டங்கள்) நடையைக் கட்டினார்.
இதையடுத்து, ரகானேவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சைத் திறம்பட எதிர்கொண்டு ஓட்டங்கள் குவித்ததுடன் முழுமை யாக ஆதிக்கம் செலுத்தினர்.
இதனால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வலுவான நிலையை நோக்கி விரைந்தது.
அபாரமாக ஆடிய ரகானே தனது பத்தாவது சதத்தை எட்டினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
ரகானே 102 ஓட்டங்களில் 'கேட்ச்' ஆனார். 7 ஓட்டங்களில் முதல்முறையாகச் சதத்தை நழுவ விட்ட விஹாரி 93 ஓட்டங்களில் வீழ்ந்தார். ரிஷப் பன்ட் ஏழு ஓட்டங்களில் ஏமாற்றம் அளித்தார்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளுக்கு 343 ஓட்டங்கள் சேர்த்து 'டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சவால்மிக்க இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் சார்பில் முதலாவதாகக் களமிறங்கிய பிராத் வெயிட் ஓர் ஓட்டமும் ஜான் கேம்பல் ஏழு ஓட்டங்களும் எடுத்து பும்ரா பந்துவீச்சில் நடையை கட்டினர்.
இதைத்தொடர்ந்து பும்ராவும் இஷாந்த் சர்மாவும் பந்துவீச்சில் மிரட்டினர்.
இதனால் வெஸ்ட் இண்டிஸ் அணியில் அடுத்து களமிறங்கிய புரூக்ஸ் 2 ஓட்டங்களும் ஹெட்மையர் ஓர் ஓட்டமும் டேரன் பிராவோ 2 ஓட்டங்களும் ஷேய் ஹோப் 2 ஓட்டக்களும் அணித் தலைவர் ஹோல்டர் 8 ஓட்டங்களும் எடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 26.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீமார் ரோச் 38 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அபாராமாக பந்து வீசிய பும்ரா 7 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் முகம்மது ஷமி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன்படி இந்திய அணி 318 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

