புதுடெல்லி: உலகப் பூப்பந்து வெற்றியாளர் போட்டியில் கடந்த இரண்டு ஆண்டும் வெள்ளிப் பதக்கதோடு திரும்பிய பி.வி.சிந்து இவ்வாண்டு முதல்முறையாகத் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் விமர்சனத்துக்கு விடையளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெசில் நகரில் நடந்த 25வது உலக பூப்பந்து வெற்றியாளர் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
"உலக வெற்றியாளர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல்முறை தோல்வி அடைந்தபோது வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு தோல்வி அடைந்தபோது கோபமும் வேதனையும் ஏற்பட்டது.
"ஏன் இந்த ஒரு போட்டியில் என்னால் வெல்ல முடியவில்லை என்று எனக்கு நானே கேள்வி கேட்டதுண்டு.
"ஆனால் இந்த ஆட்டத்தில் முந்தைய தோல்வியை நினைத்துக் கவலைப்படாமல் எனது ஆட்டத்தை மட்டும் வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
"உலக வெற்றியாளர் போட்டியில் பட்டம் வெல்லவில்லையே என்று என்னைப் பார்த்து அடிக்கடி கேள்வி கேட்டு விமர்சித்தவர்களுக்குப் பதில் அளிக்க விரும்பினேன். அந்தப் பதில் தான் இந்த வெற்றி.
"ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. நான் போட்டிக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
"மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிச் சிந்திப்பது எனக்குக் கூடுதல் நெருக்கடியை அளிக்கிறது.
"எனது ஆட்டத்தை மட்டும் நினைத்து முழு திறமையையும் வெளிப்படுத்தினால் வெற்றி தானாகவே வரும். இன்னும் நிறைய பதக்கங்கள் என்னால் வெல்ல முடியும்," என்றார்.

