ஆண்டிகுவா: அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியதால் அவுட் ஸ்விங்கர்களை வீசுவதில் தனக்குக் கூடுதல் தன்னம்பிக்கை பிறந்துள்ளதாகக் கூறியுள்ளார் இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் பும்ராவின் அபாரப் பந்துவீச்சும் அவர் கைப்பற்றிய 5 விக்கெட்டுகளும்தான் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 318 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெல்ல முக்கிய காரணமாகும்.
மேலும் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை அதிவிரைவில் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இப்போட்டியில் பும்ரா எட்டினார்.
தனது முன்னேற்றம் குறித்துப் பேசிய அவர், "நான் முன்பு அதிகம் இன் ஸ்விங்கர்களையே வீசி வந்தேன். இப்போது அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியதால் அவுட் ஸ்விங்கர்களை அதிகம் வீசுவதில் கூடுதல் தன்னம்பிக்கை பிறந்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து தொடரிலிருந்து எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
"ஒரு குழுவாக நாங்கள் துடிப்புடன் பந்துவீச்சுத் தெரிவுகளை மேற்கொண்டு வருகிறோம். என்னுடைய ஒவ்வொரு பந்தின் பின்னாலும் கடின உழைப்பு உள்ளது.
"வேகப்பந்து வீச்சாளர்களிடையே நிறைய உரையாடல்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. எங்களிடையே சிறந்த சகோதரத்துவ உணர்வு உள்ளது," என்றார் பும்ரா.
அதே சமயம் வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகளைக் குவித்த இந்திய அணித் தலைவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் கோஹ்லி.
இதற்கு முன் கங்குலி வெளிநாட்டு மண்ணில் 28 போட்டிகளில் 11ல் வெற்றிகளைத் தேடிக்கொடுத்திருந்தார். தற்போது கோஹ்லி 26 போட்டிகளில் 12ல் வெற்றி பெற்று கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
"இந்திய அணித் தலைவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய ஆசீர்வாதம். என்றாலும் இந்தச் சாதனை மிகவும் வலிமை வாய்ந்த அணியால் மட்டுமே கிடைத்தது.
"முடிவு எடுப்பது நானாக இருந்தாலும் அதைச் சிறப்பாக வெளிப்படுத்தி அறுவடை செய்வது அணியின் சக வீரர்கள்தான். நாங்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறோம்," என்றார் கோஹ்லி.

