இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் பந்துவீச்சைப் போல் இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் வீழ்த்திய பும்ரா, 2வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசி 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 16வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் பும்ரா.
அவரது பந்துவீச்சை கண்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் அசந்துபோன வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆண்டி ராபர்ட்ஸ், பும்ரா சிறந்த பந்து வீச்சாளர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
''நான் கிரிக்கெட் போட்டியில் பார்த்ததில் பும்ராவின் செயல்பாடு மிகவும் வலிமையானது. அவரின் பந்துவீச்சு பாணியைப் புரிந்துகொள்ள ஆராய வேண்டியுள்ளது.
"ஆனால், அவர் எங்களது காலகட்டத்தில் இருந்திருந்தால், அவரைப் போன்ற ஒருவரை நாங்கள் உருவாக்கியிருப்போம். எங்களது பந்துவீச்சு முறையில் இந்த செயல்பாடு மட்டுமே இல்லாமல் போய்விட்டது.
"உண்மையிலேயே பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளரை எங்களால் உருவாக்க முடியாமல் போய்விட்டது. இந்தியாவும் அவரைப் போன்ற ஒருவரை உருவாக்கும் என்று நினைக்கவில்லை.
"என்னுடைய கால கட்டத்தில் இந்தியாவில் ஏராளமான 'ஸ்பின்னர்'கள் இருந்தனர். அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். என்றாலும், வெளிநாட்டு மண்ணில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவில் கபில்தேவ் மற்றும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளரைப் பார்த்தில்லை," என்று கூறினார்.

