புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பன்ட்டிற்குப் பதில் சாஹாவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கிர்மானி தெரிவித்தார்.
ரிஷப் பன்ட் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதால் நாளைய போட்டியில் விளையாட சாஹா தகுதியானவர் என்கிறார் கிர்மானி.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி 318 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப், இரு இன்னிங்சையும் சேர்த்து 31 ஓட்டங்கள்தான் (24+7) சேர்த்தார்.
முதன்முறையாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒட்டுமொத்த போட்டிக்கும் விக்கெட் காப்பாளராகச் செயல்பட்டு வருகிறார் பன்ட். இரண்டு போட்டிக்கான டெஸ்ட் அணியில் சாஹா மாற்று வீரராக உள்ளார்.
மேலும் ரிஷப் பன்டை மூன்று வகை கிரிக்கெட்டிலும் முன்னணி விக்கெட் காப்பாளராகவும் பந்தடிப்பாளராகவும் உருவாக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் சாஹா விக்கெட் காப்பாளராகப் பணியாற்ற தகுதியானவர் என முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிர்மானி கூறுகையில் ரிஷப் பன்ட் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளார். அவர் கடவுள் கொடுத்த வரம். ஆனால் அவர் இன்னும் அதிக அளவில் கற்றுக்கொள்ள வேண்டும். விக்கெட் காப்பாளர் பணி என்பது மிகவும் கடினமானது.
"கையுறை அணிந்து கொண்டு காப்பாளராகப் பணியாற்றிட முடியாது'' என்றார்.
"துரதிருஷ்டவசமாக சகா காயத்தால் ஒரு வருடத்திற்கு மேல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்குச் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நீங்கள் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால், அவரை அணியில் வைத்திருப்பதில் பயன் என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளார் கிர்மானி.
மேலும் டோனி பற்றி பேசிய அவர், "ஓய்வு விஷயத்தில் டோனியை தனியாக விட்டு விடுங்கள். உரிய நேரம் வரும்போது அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார். அவரது ஓய்வு குறித்துப் பேசுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். டோனி இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்," என்றும் கிர்மானி கூறியுள்ளார்.
இந்நிலையில், அணியில் ரோகித் சர்மா சேர்க்கப்படாதது குறித்து அணித் தலைவர் விராத் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார்.
"அணித் தேர்வு என்பது போட்டியின் சூழ்நிலையை பொறுத்து மாறுமாடும். குறிப்பாக விஹாரியைத் தேர்வு செய்தது அவர் ஒரு நடுகள ஆட்டக்காரர் மற்றும் ஒரு பந்துவீச்சாளர் என்பதால்.
"அதனால் போட்டியில் அவர் பந்துவீசுவார். அதன் பொருட்டுதான் அவரைத் தேர்வு செய்தோம். அணியின் தலைவராக சில முடிவுகளை நான் எடுக்கிறேன்.
"ஆனால் அதில் வெற்றி என்பது அனைத்து வீரர்களையும் சார்ந்தது. அதனால் வெற்றி பெற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்," என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, நாளைய போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கம்மின்ஸ்க்கு பதிலாக கீமோ பால் இடம் பெற்றுள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் அவர் தேர்வாகியுள்ளார்.

