மொனாக்கோ: இந்தக் காற்பந்துப் பருவத்தின் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தற்போதைய வெற்றியாளர்களான லிவர்பூல் தொடக்க ஆட்டத்தில் நேப்பொலியை எதிர்கொள்ளும். இவ்விரண்டு குழுக்களும் ஆஸ்திரிய லீக் வெற்றியாளர்களான சால்ஸ்பர்க், பெல்ஜிய அணியான கெங்க் ஆகியோருடன் சேர்ந்து 'இ' பிரிவில் விளையாடும்.
இந்தப் போட்டியில் எந்தெந்த குழுக்கள் யாருடன் மோதவுள்ளன என்பதைத் தீர்மானிக்கும் குலுக்கல் முறை நேற்று மொனாக்கோ நகரில் நடைபெற்றது.
லிவர்பூல், நேப்பொலி ஆகிய இரு குழுக்களுமே தங்களுக்கு இறுதி வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடைய குழுக்கள் என்பது ஒருபுறமிருக்க, 'எஃப்' பிரிவில் பொருசியா டோர்ட்மண்ட், இன்டர் மிலான், செக் குடியரசின் வெற்றியாளர்களான ஸ்லாவிய பிராக் ஆகிய குழுக்களுடன் மோதும் பார்சிலோனாவுக்கே கடுைமயான போட்டி காத்திருப்பதாக காற்பந்து விமர்சகர்கள் கருத்துரைத்துள்ளனர்.
பொருசியா டோர்ட்மண்ட் குழு 1997ஆம் ஆண்டு வெற்றியாளர் விருதைத் தட்டிச் சென்றதுடன் 2013ஆம் இறுதிப் போட்டி வரை முன்னேறியது.
முன்னாள் செல்சி குழுவின் நிர்வாகியான அன்டோனியோ கோன்டே பொறுப்பேற்றுள்ள இன்டர் மிலான் குழு, 2010ஆம் ஆண்டு பார்சிலோனாவை வெற்றிகொண்ட குழு என்பது நினைவுகூரத்தக்கது.
"இந்தப் பிரிவு உண்மையிலேயே கடுமையான பிரிவு. அதனால், எங்களுக்கு இது மிகப் பெரிய சவால்," என்று கூறுகிறார் டோர்ட்மண்ட் குழுவின் நிர்வாகியான லுசியன் ஃபேவர்.
சென்ற காற்பந்துப் பருவத்தில் லிவர்பூலிடம் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு இம்முறை பயர்ன் மியூனிக்குடன் 'பி' பிரிவில் இணைந்துள்ளது. இவர்களுடன் கிரேக்க வெற்றியாளரான ஒலிம்பியாக்கோஸ், செர்பியாவின் ரெட் ஸ்டார் பெல்கிரேட் ஆகிய குழுக்கள் இந்தப் பிரிவில் உள்ளன.
இந்தப் பருவத்தில் யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்று மீண்டும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு திரும்பியுள்ள செல்சி அயக்ஸ் ஆம்ஸ்டர்டாம், சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் முன்னர் இரண்டாம் இடத்தில் வந்த வெலன்சியா, லீல் குழுக்கள் 'எச்' பிரிவில் உள்ளன.
இந்தக் குழுக்கள் எல்லாம் ஓரளவு கடும் போட்டியை எதிர்கொள்ளும் பிரிவுகளில் முட்டி மோத இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றிக் குழுவான மான்செஸ்டர் சிட்டிக்கு எளிதான 'சி' பிரிவு கிடைத்திருப்பதாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குழு காற்பந்து உலகில் புதிய வரவான அடலாண்டா குழு, ஷக்தர் டொனட்ஸ்க், டைனமோ ஸாக்ரப் ஆகிய குறிப்பிட்டுச் சொல்ல முடியாத குழுக்களுடன் மோதுகிறது.
எனினும், அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தக்கூடிய இரு குழுக்களான ரியால் மட்ரிட், பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் 'ஏ' பிரிவில் துருக்கிய வெற்றியாளர் குழுவான கலடாசராய் குழுவுடனும் பெல்ஜியத்தை சேர்ந்த புருகே குழுவுடனும் போட்டியிடுகின்றன.
கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்றுள்ள யுவென்டஸ் குழு, அட்லெட்டிக்கோ மட்ரிட், பாயர் லிவர்குசன், லோக்கோமோட்டிவ் மாஸ்கோ குழுக்கள் யாவும் 'டி' பிரிவில் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன.
"இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஆண்டு தொடங்கும்போதெல்லாம் நான் நம்பிக்கையோடு இருப்பேன். அதே நம்பிக்கை இந்த ஆண்டும் தொடரும்," என்று ரொனால்டோ மீண்டும் மற்ற குழுக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். இவற்றில் ஓரளவு சம அளவு சவால்களை அனைத்துக் குழுக்களும் சந்திப்பது என்பது ஸெனித் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், பென்ஃபிகா, லியோன், லெய்ப்ஸிக் ஆகிய குழுக்களைக் கொண்ட 'ஜி' பிரிவுதான் என்று கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளின் முதல் ஆட்டங்கள் செப்டம்பர் 17, 18 தேதிகளில் இடம்பெறும்.

