புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் பாதுகாப்பான வீரர்களின் கையில் உள்ளது உறுதியாகிவிட்டால் தனது கிரிக்கெட் வாழ்வு குறித்து முடிவு எடுப்பதாக மகேந்திர சிங் டோனி கூறியதாக இந்திய அணித் தேர்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் டோனியின் பெயர் இல்லாததால் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா என்று பலதரப்புகளிலும் எழுந்த கேள்விக்குப் பெயர் வெளியிட விரும்பாத அணித் தேர்வாளர் ஒருவர்ஐ ஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.
"எதிர்கால அணியை தயார் செய்து உலகக் கிண்ண 20 ஓவர் போட்டிக்கான அணியைத் தயார் செய்ய டோனி எங்களுக்கு அவகாசம் அளித்துள்ளார்.
"பொதுக் கருத்துக்கு முன்பாக அணிதான் தனக்கு முக்கியம் என்று அவர் உணர்கிறார், மேலும் ரிஷப் பண்ட் காயமடைந்தால், மாற்று விக்கெட் காப்பாளர் நம்மிடம் இல்லை என்பதையும் பரிசீலித்து டோனி தன் வரவை நிறுத்தி வைத்துள்ளார். இப்போதைக்கு அவரைப் புறக்கணிக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
"மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னால் அவர் 2 மாத கால ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினார். அது இன்னமும் முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
"350 ஒருநாள் அனைத்துலகப் போட்டிகளிலும் 20 ஓவர் போட்டிகள் 98களிலும் ஆடிய ஒருவரைப் பற்றி கருத்து கூறுவது எளிது.
"அவர் அணியை எத்தனைப் போட்டிகளில் வென்று கொடுத்துள்ளார் என்பதும் பலரும் அறிந்ததே.
"டோனிக்குப் பதிலாக களமிறங்கும் பண்ட் காயமடைந்தால், குறைந்த ஓவர் போட்டியில் மாற்று விக்கெட் காப்பாளர் இல்லை என்பதே உண்மை," என்று திட்டவட்டமாக கூறினார் அவர்.

