ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் பும்ரா

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் பும்ரா

2 mins read
1bb88045-d3e1-4439-9320-48e1deb7412e
ஹாட்ரிக் விக்கெட் உட்பட ஒரே நாளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ராவைக் (வலமிருந்து 3வது) கொண்டாடும் சக இந்திய வீரர்கள். படம்: இணையம் -

லண்டன்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபைனா பார்க் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் பூவா, தலையா வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களைக் குவித்தது.

அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 225 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதமாகும். அணித் தலைவர் விராத் கோஹ்லி 76 ஓட்டங்களும் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 55 ஓட்டங்களும் சேர்த்தனர்.

டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசதத்தைக் கடந்த இஷாந்த் சர்மா 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரர் என்று பெயர் எடுத்த 140 கிலோ எடை கொண்ட கார்ன்வால் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

பிரத்வெயிட், ரோச் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 87 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

34 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹெட்மையர் ஷமி பந்தில் வெளியேறினார்.

ஜான் கேம்பெல் (2) , டேரன் பிராவோ (4), ஷமாரா புரூக்ஸ் (0) ஆகியோரது விக்கெட்டை ஹாட்ரிக்காக எடுத்தார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் பும்ரா.

ஹாட்ரிக் விக்கெட்டைத் தொடர்ந்து, ரோஸ்டன் சேஸ், பிரத்வெயிட், கோல்டர் ஆகியோரையும் வெளியேற்றி மொத்தம் ஆறு விக்கெட்டுகளை அள்ளினார் பும்ரா.

இவருக்கு முன்னதாக, 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்பஜன் சிங்கும், 2006ல் பாகிஸ்தானுக்கு எதிராக இர்ஃபான் பதானும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர்.

பாலோ-ஆனைத் தவிர்க்க இன்னும் 130 ஓட்டங்கள் தேவை என்ற நெருக்கடியில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.