பர்ன்லி: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரின் கடந்த பருவத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் நடப்பு பருவத்திலும் அதைத் தக்கவைத்துக் கொண்டு பட்டத்தை வெல்ல முற்படுமா என்ற அச்சம் தற்போது நீங்கியதாகவே எண்ணுகிறார்கள் காற்பந்து ரசிகர்கள்.
நேற்று அதிகாலை பர்ன்லிக்கு எதிரான ஆட்டத்தை லிவர்பூல் 3-0 என்ற வென்றதுதான் அதற்குக் காரணம். பர்ன்லி சிறப்பான தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும் 33வது நிமிடத்தில் விழுந்த சொந்த கோல் அவர்களது துரதிருஷ்டம்.
டிரண்ட் அலெக்சாண்டர் உதைத்த பந்து பர்ன்லியின் கிறிஸ் வுட்ஸ் மீது பட்டு சொந்த வலைக்குள் சென்றது. பர்ன்லியை விடாமல் துரத்திய துரதிருஷ்டம் லிவர்பூலின் இரண்டாவது கோலானது.பென் மீ உதைத்த பந்து ஃபெர்மினோவிடம் சென்று சாடியோ மனேவால் 37வது நிமிடத்தில் கோலானது.
சாலா உதைத்த பந்தை 80வது நிமிடத்தில் லாவகமாக கோல் வலைக்குள் செலுத்தி லிவர்பூலின் வெற்றியை உறுதி செய்தார்."இவ்வாறு விளையாடுவோம் என்று நான்கு வாரங்களுக்கு முன் நான் நினைக்கவில்லை.
"சாலா, மனே, ஃபெர்மினோ ஆகியோர் பருவத்திற்கு முந்திய ஆட்டங்களில் பெரும்பாலும் விளையாடவில்லை என்றாலும் லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடி வருகிறார்கள்," என்றார் லிவர்பூல் நிர்வாகி கிளோப்.
நடப்பு பருவத்தில் ஆடிய நான்கு ஆட்டங்களையும் கைப்பற்றியது, கடந்த பருவத்தையும் சேர்த்து இபிஎல் தொடரில் 13 தொடர் வெற்றி என்ற குழுவின் ஆகச்சிறந்த சாதனையோடு வெற்றி நடைபோடுகிறது லிவர்பூல். இதர சில ஆட்டங்களின் முடிவுகள்: செல்சி 2-2 செஃப், செளத்ஹேம்டன் 1-1 மேன்யூ, லெஸ்டர் 3-1 போர்ன்மத்.

