சமநிலை: ஆர்சனல் நிம்மதிப் பெருமூச்சு

சமநிலை: ஆர்சனல் நிம்மதிப் பெருமூச்சு

2 mins read
4c4755b3-9fe6-44d9-9d68-fc5f3fee07ea
தப்பியோடும் பந்தை கால்களுக்குள் கொண்டுவர முயலும் ஹேரி கேன் (இடது), ஆர்சனலின் சாக்ரட்டிஸ். படம்:இபிஏ -

லண்டன்: ஞாயிறு இரவு எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற பரபரப்பான இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியின் இரண்டாவது பாதியில் ஆர்சனல் வீறுகொண்டு எழுந்து தோல்வியைத் தவிர்த்தது.

இரண்டு கோல்களைப் புகுத்தி டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்சுடனான ஆட்டத்தை எதிர்பாராத வகையில் அது சமன் செய்தது.

இரு அணிகளும் போட்டியை சமநிலை செய்ததன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆர்சனல் 7 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியதோடு ஸ்பர்ஸ் 5 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் உள்ளது. போட்டி தொடங்கியதுமே ஆர்சனல் வீரர்கள் அதிர்ச்சியை எதிர்கொண்டனர்.

கோல் கம்பத்தை நோக்கி எரிக் லாமெலா வேகமாக உதைத்த பந்தை ஆர்சனல் கோல் காப்பாளர் தடுக்க முயன்றபோது அந்தப் பந்து கையில் பட்டு வெளியேற கிறிஸ்டியான் எரிக்சன் எதிர்ப்பின்றி பந்தை வலைக்குள் செலுத்தினார். இதன்மூலம் 10ஆவது நிமிடத்திலேயே ஸ்பர்ஸ் முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முழுமையாக ஸ்பர்சின் ஆதிக்கத்துக்கு மாறிவிட்டது.

கிரானிட் ஜாகா செய்த சிறு தவற்றின் காரணமாக ஸ்பர்சுக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்றும் கிடைத்தது.

40 ஆவது நிமிடத்தில் ஹேரி கேன் அதனை கோலாக மாற்ற 2-0 என்னும் வலுவான நிலையை ஸ்பர்ஸ் அடைந்தது.

இருப்பினும் முதல்பாதி ஆட்டம் முடியும் வேளையில் அலெக்சாண்டர் லகாசெட் எதிரணியின் தற்காப்பு அரணைத் தகர்த்து கோல் புகுத்தி ஆர்சனலுக்கு ஆறுதல் அளித்தார்.

அந்த கோலைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஆர்சனல் அணி அதிக வேகம் காட்டியது. மாட்டியோ குவன்டோசி தாழ்வாக உதைத்த பந்தை கோல் ஆகிவிடாமல் ஸ்பர்ஸ் கோல் காப்பாளர் ஹூகோ லொரிஸ் நூலிழையில் தடுத்தார். அதேபோன்று தாம் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியதைக் கண்டு நொந்துபோனார் ஹேரி கேன்.

போட்டி முடிய 19 நிமிடங்கள் இருந்த நிலையில் ஆர்சனலுக்காக பிரே எமெரிக் அபாமெயாங் அபார கோல் ஒன்றைப் புகுத்தி போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். தோல்வி தவிர்க்கப்பட்டதன் மூலம் ஆர்சனல் வீரர்களும் ரசிகர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.