மிலான்: மான்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்து விளையாட தாம் எடுத்த முடிவில் எவ்வித வருத்தமும் இல்லை என்று நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சிஸ் சான்செஸ் தெரிவித்துள்ளார்.
யுனைடெட்டுக்காக 19 மாதங்கள் விளையாடிய பிறகு இப்பருவத்தில் அவர் இத்தாலியின் இன்டர் மிலான் குழுவில் இரவல் முறையில் இணைந்துள்ளர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆர்சனலிலிருந்து யுனைடெட்டுக்குச் சென்றார் சான்செஸ். யுனைடெட்டுக்காக 45 ஆட்டங்களில் அவர் களமிறங்கியபோதும் வெறும் ஐந்து கோல்கள் மட்டுமே போட்டார்.
யுனைடெட்டுக்காக விளையாடியது தமக்கு மகிழ்ச்சி அளித்தபோதிலும் அக்குழுவுக்காகக் களமிறங்க தமக்குப் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றார் அவர்.
இதற்கிடையே, ஹென்ரிக் மிக்கித்தார்யானை ஆர்சனலிடமிருந்து ரோமா இரவல் பெற்றுள்ளது. இப்பருவம் முழுவதும் அவர் ரோமாவுக்காக விளையாடுவார்.
மிக்கித்தார்யானை வாங்கும் தெரிவை ரோமாவுக்கு ஆர்சனல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல மான்செஸ்டர் யுனைடெட்டின் தற்காப்பு ஆட்டக்காரர் மேட்டியோ டார்மியான் இரவல் முறையின்படி இத்தாலியின் பார்மாவில் இணைந்துள்ளார்.
கடந்த பருவத்தில் யுனைடெட்டுக்காக அவர் ஏழு ஆட்டங்களில் மட்டும் களமிறங்கினார்.
அர்ஜெண்டினா தாக்குதல் ஆட்டக்காரர் மௌரோ இகார்டி இன்டர் மிலானிலிருந்து இரவல் முறையின்படி பாரிஸ் செயிண்ட் ஜெர்மேனில் இணைந்துள்ளார்.

