நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் பிரிவில் உலகின் மூன்றாவது நிலை வீரரும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவருமான ரோஜர் ஃபெடரர் நான்காவது சுற்றில் டேவிட் கோபினை (பெல்ஜியம்) எதிர்கொண்டார்.
இதில் ஃபெடரர் 6-2, 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். அவர் இன்று நடைபெறும் காலிறுதியில் டிமிட்ரோவை (பல்கேரியா) சந்திக்கிறார்.
டிமிட்ரோவ் நான்காவது சுற்றில் 7-5, 6-3, 6-4 என்ற கணக்கில் மினாவூரை (ஆஸ்திரேலியா) தோற்கடித்தார்.
வாவ்ரிங்கா காலிறுதியில் ஐந்தாவது நிலை வீரரான மெட்வதேவை (ரஷ்யா) சந்திக்கிறார்.
2014ஆம் ஆண்டு வெற்றியாளர் மரின் சிலிச்சை 6-3, 3-6, 6-1, 6-2 எனும் செட் கணக்கில் தோற்கடித்து ஒன்பதாவது முறையாகக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார் ரஃபாயல் நடால்.
பெண்கள் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரும் எட்டாவது நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நான்காவது சுற்றில் பெட்ரோ மேட்ரிக்குடன் (செக் குடியரசு) மோதினார். இதில் செரீனா 6-3, 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
உலகத் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஷ்லிபார்ட்டி (ஆஸ்திரேலியா) மூன்றாவது வரிசையில் உள்ள பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் நான்காவது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்கள்.
சீன வீராங்கனை வாங், இங்கிலாந்தை சேர்ந்த ஹோண்டா ஆகியோர் முறையே அவர்களை வீழ்த்தினர்.

