உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் இன்று சிங்கப்பூர்-ஏமன் மோதல்

உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் இன்று சிங்கப்பூர்-ஏமன் மோதல்

3 mins read

வரும் 2034ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாடும் அணிகளுள் ஒன்றாக சிங்கப்பூரும் இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம்.

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாம் சுற்று தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

தொடரை நடத்தும் அணி என்ற முறையில் இறுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாட கத்தார் தகுதிபெற்றுவிட்ட நிலையில் ஆசியாவில் இருந்து மேலும் நான்கு அணிகள் நேரடியாகத் தகுதி

பெறும்.

வேறு கண்டத்தைச் சேர்ந்த அணியுடனான 'பிளே ஆஃப்' சுற்று ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் இன்னோர் ஆசிய அணியும் இறுதிச் சுற்று ஆட்டங்களுக்குத் தகுதிபெறலாம். அந்த வாய்ப்புகளைப் பெற, மொத்தம் நாற்பது அணிகள் எட்டுப் பிரிவுகளாக பலப்பரிட்சை நடத்தவிருக்கின்றன.

தகுதிச் சுற்றின் இரண்டாம் சுற்றில் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் அணி, தேசிய விளையாட்டரங்கில் இன்று நடக்க உள்ள முதல் ஆட்டத்தில் ஏமனுடன் பொருதவுள்ளது. சவூதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், பாலஸ்தீனம் ஆகியவை 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகள்.

'டி' பிரிவிலிருந்து சவூதி அரேபியாவும் உஸ்பெகிஸ்தானும் அடுத்த சுற்றில் நுழைய அதிக வாய்ப்புள்ளது. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய, அந்த அணிகளை வீழ்த்தி, பட்டியலின் முதல் இரு இடங்களுக்குள் சிங்கப்பூர் அணி வருவது என்பது குதிரைக்கொம்புதான். ஆயினும், மூன்றாம் இடத்தில் வருவதே சிங்கப்பூர் அணிக்குப் பெரிய நம்பிக்கையைத் தரும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், மூன்றாம் இடத்தில் வரும் பட்சத்தில் ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றின் மூன்றாம் சுற்றுக்குள் நுழைய முடியும்.

சிங்கப்பூர் அணி இதற்குமுன் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியதே இல்லை.இந்நிலையில், இன்றிரவு நடக்கும் ஆட்டத்தில் தரவரிசையில் தன்னைவிட 20 இடங்கள் மேலுள்ள ஏமனை வீழ்த்த, 162வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் அணி கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

இதுபற்றி சிங்கப்பூர் அணியின் ஜப்பானியப் பயிற்றுவிப்பாளர் டட்சுமா யோஷிடா கூறுகையில், "2034 உலகக் கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெறுவது என்பது நல்லதொரு சவால். இப்போதைய ஆட்டக்காரர்கள் அப்போது விளையாடப் போவதில்லை என்றாலும் அவர்களால் இளம் தலைமுறையினரிடம் வெற்றி மனோபாவத்தை விதைக்க முடியும். அதற்கு அவர்களும் தயாராக உள்ளனர். அவர்களின் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. போட்டியில் வெல்ல முயலவேண்டும். ரசிகர்களும் திரளாக வந்து ஆதரவு தரவேண்டும்," என்றார்.

அணித் தலைவர் ஹாரிஸ் ஹருணும் இதே கருத்துகளைப் பிரதிபலித்தார்."இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்த, நல்ல செயல்பாடும் நம்பிக்கை தரும் ஆட்ட முடிவுகளும் அவசியம். திறமையான, வளர்ந்து வரும் ஆட்டக்காரர்களை நமது அணி கொண்டுள்ளது. அவர்களின் எதிர்காலத்திற்கு இது நல்லதொரு தளமாக அமையும்," என்றார் ஹாரிஸ்.

இதனிடையே, இன்று நடக்க உள்ள இன்னோர் ஆட்டத்தில் 'இ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஓமானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்தியாவின் கௌஹாத்தி நகரில் நடைபெறுகிறது. பங்ளாதேஷ், கத்தார், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இதே பிரிவில் உள்ளன.