பல்கேரிய வீரரிடம் அடிபணிந்த ஃபெடரர்

பல்கேரிய வீரரிடம் அடிபணிந்த ஃபெடரர்

1 mins read
fe4c6273-6f12-4c3f-bf82-470f73183d1f
பல்கேரிய ஆட்டக்காரர் கிரிகோர் டிமிட்ரோவ் -

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருதை ஆறாவது முறையாகவும் ஒட்டுமொத்தத்தில் 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வெல்லும் முனைப்பில் இருந்த உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரரைத் தோற்கடித்து, அதிர்ச்சி அளித்தார் இளம் பல்கேரிய ஆட்டக்காரர் கிரிகோர் டிமிட்ரோவ்.

உலகத் தரவரிசையில் 78வது இடத்தில் இருக்கும் டிமிட்ரோவ், மூன்றாம் இடத்தில் இருக்கும் ஃபெடரரை காலிறுதிச் சுற்றில் 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.

கடந்த 28 ஆண்டுகளில் தரவரிசையில் இவ்வளவு பின்னால் இருக்கும் ஆட்டக்காரர் ஒருவர் அரையிறுதிக்கு முன்னேறிஇருப்பது இதுவே முதன்முறை. அரையிறுதியில் டிமிட்ரோவ், ஐந்தாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வதேவை எதிர்கொள்கிறார்.

இதனிடையே, அமெரிக்கப் பொது விருதுப் போட்டியில் தமது நூறாவது வெற்றியைப் பதிவுசெய்து, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ்.

காலிறுதியில் அவர், சீன வீராங்கனை வாங் சியாங்கை 6-1, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வீழ்த்தினார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் செரீனா, உக்ரேன் நாட்டின் எலினா ஸ்விடோலினாவை எதிர்த்து ஆடவிருக்கிறார்.