சிங்கப்பூர் - ஏமன் காற்பந்தாட்டம் சமநிலையில் முடிந்தது

சிங்கப்பூர் - ஏமன் காற்பந்தாட்டம் சமநிலையில் முடிந்தது

1 mins read

2022 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரும் ஏமனும் நேற்று மோதின.

இந்த ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதல் சிங்கப்பூர்த் தாக்குதலில் தீவிரம் காட்டியது.

அதற்குப் பலனாக ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் சிங்கப்பூர் கோல் போட்டது.

இக்சான் ஃபாண்டி தலையால் முட்டிய பந்து வலைக்குள் புகுந்தது. இனி சிங்கப்பூர் எளிதில் வெற்றி பெறும் என்று அரங்கில் இருந்தோர் நம்பிக்கையுடன் காத்திருந்தபோது இடைவேளைக்கு முன்பு ஏமன் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு சிங்கப்பூர்க் குழுவை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

கண்சிமிட்டும் நேரத்தில் இரண்டு கோல்களை ஏமன் போட்டது. இடைவேளையின்போது 2-1 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் பின்தங்கியிருந்தது.

இருப்பினும் பிற்பாதி ஆட்டத்தில் துவண்டுவிடாமல் போராடிய சிங்கப்பூர், ஃபாரிஸ் ராம்லி மூலம் கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது. இறுதியில் ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.