பூக்கரெஸ்ட்: யூரோ 2020 காற்பந்துக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றில் இதுவரை தான் ஆடிய ஐந்து ஆட்டங்களிலும் ஸ்பெயின் அணி வெற்றியை ருசித்துள்ளது.
ஆனாலும், நேற்று முன்தினம் ருமேனியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அந்த அணி கடுமையான போராட்டத்திற்குப் பிறகே வெற்றிக்கனியைப் பறிக்க முடிந்தது.
அணித்தலைவர் செர்ஜியோ ராமோஸ் ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் கோலடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார். அவ்வணியில் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியபோதும் ருமேனிய கோல்காப்பாளர் சிப்ரியன் டட்டருசானு அற்புதமாகச் செயல்பட்டு அவற்றை முறியடித்தார்.
தமது முதல் மூன்று முயற்சிகளைக் கோட்டைவிட்டபோதும், இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோலடித்து ஸ்பெயினின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார் பாக்கோ அல்காசெர்.
ஆயினும், 59வது நிமிடத்தில் ருமேனியாவின் ஃபுளோரின் அண்டோன் ஒரு கோலடித்ததும் ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்தபோது லோரென்டே சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதும் ஸ்பெயினுக்கு நெருக்கடியை அளித்தன. ஒருவழியாக, ஒரு கோல் முன்னிலையைத் தற்காத்த அந்த அணி, இறுதியில் 2-1 என வெற்றிபெற்றது.
மற்ற ஆட்டங்களில் இத்தாலி 3-1 என ஆர்மீனியாவையும் சுவீடன் 4-0 என ஃபாரோ தீவுகளையும் டென்மார்க் 6-0 என ஜிப்ரால்டரையும் தோற்கடித்தன.

