செரீனாவுடன் மோதும் 19 வயது வீராங்கனை

செரீனாவுடன் மோதும் 19 வயது வீராங்கனை

2 mins read
e814bdf0-9a53-4a93-beef-48058e9d0f34
கனடிய வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீன்ஸ்க்கு. படம்: ஏஎஃப்பி -

நியூயார்க்: உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பத்தாவது முறையாக அமெரிக்கப் பொது விருதுத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் அவர் 19 வயதே ஆன கனடிய வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீன்ஸ்குவை எதிர்த்தாடவுள்ளார்.

அரையிறுதியில் செரீனா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஐந்தாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விடோலினாவை மிக எளிதாக வீழ்த்தினார்.

கடைசியாகப் பங்கேற்ற ஆறு முக்கிய தொடர்களில், நான்காவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் செரீனா. கடந்த ஆண்டில் விம்பிள்டன், அமெரிக்கப் பொது விருது, இவ்வாண்டில் விம்பிள்டன் என மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளில் அவர் வெற்றியைத் தவறவிட்டார்.

இந்நிலையில், இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் செரீனா நிச்சயம் வென்று, மார்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட் ஸ்லாம் சாதனையை அவர் சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இவ்வாண்டில் இண்டியன்வெல்சிலும் டொரோன்டோவிலும் நடைபெற்ற போட்டிகளில் பட்டம் வென்று சிறந்த வீராங்கனையாக உருவெடுத்து வரும் பியான்கா ஆண்ட்ரீஸ்கு, அமெரிக்கப் பொது விருதின் அரையிறுதியிலும் அருமையாக ஆடி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

உலகத் தரவரிசையில் 15ஆம் இடத்தில் இருக்கும் பியான்கா, தம்மைவிட இரு இடங்கள் மேலே இருக்கும் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை 7-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.

சிறுவயது முதல் தமது கனவு நாயகியாக இருந்துவரும் செரீனாவை எதிர்த்துக் களமிறங்குவதை அவராலேயே நம்ப முடியவில்லை. செரீனா 1999ல் முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றபோது பியான்கா பிறந்திருக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.