இன்று பாலஸ்தீனத்தை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்

இன்று பாலஸ்தீனத்தை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்

2 mins read
fcd23ead-85ee-43ff-a7f4-aabe87461158
இன்றைய ஆட்டத்திலும் ஃபாரிஸ் ராம்லி சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் -

ஜாலான் புசார் விளையாட்டரங்கில் இன்றிரவு நடைபெறும் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் சிங்கப்பூர், பாலஸ்தீனக் காற்பந்துக் குழுக்கள் மோதுகின்றன.

ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் பாலஸ்தீனம் 102வது இடத்திலும் சிங்கப்பூர் 162வது இடத்தில் உள்ளன. தேசிய விளையாட்டரங்கில் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர், ஏமன் குழுக்கள் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூரைவிட 20 இடங்களுக்கு மேல் ஏமன் உள்ளது. சிங்கப்பூர் குழுவின் தற்காப்புப் பிரிவில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால் அதற்கெதிராக ஏமன் இரு கோல்களைப் புகுத்தியது.

ஏமனைவிட பாலஸ்தீனம் இன்னும் வலுவான எதிரணி என்பதால் அந்தக் குழுவை வீழ்த்துவது என்பது சிங்கப்பூருக்கு சற்று கடினமான இலக்குதான். சிங்கப்பூரும் ஏமனும் பொருதிய அதே நாளில் உஸ்பெகிஸ்தான் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் பாலஸ்

தீனம் வென்றது. ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் உஸ்பெகிஸ்தான் 84வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'டி' பிரிவில் இடம்பெறும் மற்றொரு குழு சவூதி அரேபியா. உலகத் தரவரிசைப் பட்டியலில் அது 68வது நிலையில் உள்ளது. அக்குழு இன்னும் எந்தவோர் ஆட்டத்திலும் விளையாடவில்லை.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் சொந்த மண்ணில் சிங்கப்பூர் விளையாடுவதால் ரசிகர்கள் தங்களுக்குப் பக்கபலமாக இருப்பர் என வீரர்கள் நம்புகின்றனர்.

தமது வீரர்கள் இந்த ஆட்டத்தில் இன்னும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என சிங்கப்பூர் குழுத் தலைமைப் பயிற்றுவிப்பாளர் தட்சுமா யோஷிடா எதிர்பார்க்கிறார்.

"ஒவ்வொரு வீரரிடமும் தனித்

திறமை உள்ளது. அதனால்தான் அவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்," என்ற அவர், ஆட்டக்காரர் ஃபாரிஸ் ராம்லியைக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஏமனுக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய வீரர்களில் 27 வயது ஃபாரிஸும் ஒருவர். சிங்கப்பூரின் இரண்டாவது கோலை அவர் போட்டார்.

"எதிரணிக்கு எதிராக கோல் போடும் திறன் படைத்தவர் ஃபாரிஸ். அவர் மேலும் சிறந்து விளங்குவதற்கு வாய்ப்பு உள்ளது," என்று யோஷிடா கருத்துரைத்தார்.

திருமணமாகிய ஃபாரிஸுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. ஏமனுக்கு எதிராக சிங்கப்பூர் விளையாடிய அன்றைய தினம்தான் அது தமது முதல் பிறந்தநாளைக் கொண்டாடியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக 'கேக்' வாங்கி மனைவி, மகனைச் சந்தித்து அவர்களுடன் பொன்னான நேரத்தைச் செலவழித்தார் அவர்.

அந்தச் சந்திப்பே, பின்னர் ஆட்டத்தில் சிறப்பாக அவர் விளையாட உந்துசக்தியாக விளங்கியது. இந்நிலையில், பாலஸ்தீனத்தை வெல்ல தாமும் தமது குழுவினரும் வேட்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஃபாரிஸ், ஏமனுடனான ஆட்டத்தில் செய்த தவறுகளை இன்றைய ஆட்டத்தில் செய்யாமல் இருக்க உறுதியுடன் இருப்பதைச் சுட்டினார்.