லயன்சுக்குக் குவியும் பாராட்டுகள்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் சிங்கப்பூர் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தை ஏமனுடன் 2-2 எனும் கோல் கணக்கில் அது சமநிலை கண்டது. அடுத்த ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் பாலஸ்தீனத்தை சிங்கப்பூர் தோற்கடித்தது.

2006ஆம் ஆண்டில் தன்னைவிட தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருந்த ஈராக்கை சிங்கப்பூர் வீழ்த்தியது. அதையடுத்து, தற்போது 102வது இடத்தில் இருக்கும் பாலஸ்தீனத்தை 162வது இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் தோற்கடித்துள்ளது.  அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று பலம் பொருந்திய சவூதி அரேபியாவை சிங்கப்பூர் சந்திக்கிறது. இந்தச் சவால்மிக்க ஆட்டம் சவூதியில் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஐந்து நாட்கள் கழித்து, உஸ்பெக்கிஸ்தானுடன் சிங்கப்பூர் ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் மோதுகிறது. இதுவரை நடந்த இரண்டு ஆட்டங்களில் சிங்கப்பூர் நான்கு புள்ளிகளைக் குவித்துள்ளது.

இதற்கு சிங்கப்பூரின் முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.  சிங்கப்பூர் வீரர்கள் மிகுந்த முனைப்புடன் விளையாடியதாக சிங்கப்பூர் அணியின் முன்னாள் தலைவர் டெரி பத்மநாதன் கூறினார்.

வீரர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு விளையாடியதாக அவர் தெரிவித்தார். “ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை சிங்கப்பூர் ஆட்டக்காரர்கள் பயமின்றி விளையாடினர். எதிரணியினருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினர்,” என்றார் பத்மநாதன். “சிங்கப்பூர் காற்பந்துப் போட்டியின் பயிற்றுவிப்பாளராக டட்சுமமா யொஷிடா பொறுப்பேற்றதை அடுத்து தமது கொள்கைகளையும் ஆட்டக்காரர்களின் பொறுப்புகளையும் தெளிவுபடுத்தினார்,” என்று ஹோம் யுனைடெட்டின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளரும் தேசிய அணியின் உடற்தகுதி பயிற்றுவிப்பாளருமான நோ ரஹ்மான் தெரிவித்தார்.

சிங்கப்பூர் குழுவின் செயல்பாடு குறித்து முன்னாள் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சாண்டர் டூரிச்சும் மகிழ்ச்சி தெரிவித்தார். “சிங்கப்பூருக்காக வெவ்வேறு ஆட்டக்காரர்கள் கோல்கள் போட்டது நல்ல விஷயமே. கோல் போட ஒருவரை மட்டும் நம்பியிருக்கும் நிலை இக்குழுவுக்கு இல்லை என்பதை இது காட்டுகிறது,” என்றார் டூரிச்.