லெஸ்டருக்கு மான்செஸ்டரில் காத்திருக்கும் பெரும் சவால்

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ஓல்ட் டிராஃபர்ட் திடல், இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் திடல்களில் ஆக கடினமான ஒன்று. ஆதலால், யுனைடெட் குழுவைக் குறைத்து மதிப்பிடாமல் இன்றிரவு நடக்கும் ஆட்டத்தில் நல்லதொரு முடிவை எட்ட லெஸ்டர் சிட்டி ஆட்டக்காரர்கள் முயல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அதன் நிர்வாகி பிரெண்டன் ரோஜர்ஸ்.

இந்தப் பருவத்தில் இதுவரை நடந்த நான்கு ஆட்டங்களில் இரண்டில் வென்றும் இரண்டில் சமநிலையும் கண்டு, எட்டுப் புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறது லெஸ்டர் சிட்டி. 

மாறாக, யுனைடெட் குழு  ஒரு வெற்றி, இரு சமநிலை, ஒரு தோல்வியுடன் ஐந்து புள்ளிகளை மட்டுமே பெற்று ஐந்தாமிடத்தில் இருக்கிறது.

சொந்த அரங்கான ஓல்ட் டிராஃபர்டில் தான் ஆடிய கடைசி ஐந்து ஆட்டங்களில் யுனைடெட் மூன்றில் தோல்வி கண்டுள்ளது. 

ஆயினும், ஒரு காலத்தில் அசைக்க முடியாத குழுவாகத் திகழ்ந்து வந்த யுனைடெட், இன்னமும் எந்த அணியையும் வீழ்த்தும் வலிமையுடன்தான் இருக்கிறது என ரோஜர்ஸ் நம்புகிறார்.

“ஓல்ட் டிராஃபர்டில் யுனைடெட்டை எதிர்த்தாடுவது எப்போதுமே சிரமமான ஒன்று. அங்கு எனக்கு வெற்றியும் தோல்வியும் கிடைத்திருக்கிறது,” என்றார் ரோஜர்ஸ். லிவர்பூல் குழுவின் நிர்வாகியாக இருந்தபோது, ஓல்ட் டிராஃபர்டில் அவர் யுனைடெட்டை வீழ்த்திக் காட்டியிருக்கிறார்.

இருந்தாலும், கடந்த 21 ஆண்டுகளில் அந்த அரங்கில் நடந்த இபிஎல் போட்டிகளில் லெஸ்டர் குழு ஒருமுறைகூட வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், இம்முறை சிறந்ததொரு செயல்பாட்டை வெளிப்படுத்தினால் நல்லதொரு முடிவைப் பெற்றுவிடலாம் என்று ரோஜர்ஸ் திடமாக நம்புகிறார்.

அண்மையில் லெஸ்டரில் இருந்து யுனைடெட்டுக்கு மாறிய ஹேரி மெக்வாயர், முதன்முறையாக தமது முன்னாள் குழுவை எதிர்த்து ஆடவிருக்கிறார்.

‘தகர்க்கப்படவே சாதனைகள்’

ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு லிவர்பூல் குழுவை ஒருமுறைகூட வீழ்த்த முடியாவிடினும், “சாதனைகள் என்பதே தகர்ப்பதற்காகத்தான்” என நம்பிக்கையுடன் இருக்கிறார் நியூகாசல் யுனைடெட் குழுவின் நிர்வாகி ஸ்டீவ் புரூஸ்.

“ஐரோப்பிய வெற்றியாளரை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறோம். இந்தப் பருவத்தில் ஸ்பர்சை வீழ்த்தி இருக்கிறோம். கடந்த பருவத்தில் மேன்சிட்டியை வெற்றிகொண்டோம். அவ்வகையில், இன்றும் வெற்றி மனப்பான்மையுடன் களமிறங்கவிருக்கிறோம்,” என்றார் அவர்.

இன்றிரவு நடக்கும் மற்ற ஆட்டங்களில் செல்சி-உல்வ்ஸ், ஸ்பர்ஸ்-கிரிஸ்டல் பேலஸ், மான்செஸ்டர் சிட்டி - நார்விச் சிட்டி குழுக்கள் பொருதுகின்றன.

Loading...
Load next