ஷுப்மன்: இன்னொருவரின் பாணியைப் பின்பற்றமாட்டேன்

புதுடெல்லி: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காகத் தேர்வாகியிருக்கிறார் இளம் வீரரான ஷுப்மன் கில், 20.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் குறிப்பிடும்படியாக ஓட்டங்களைக் குவிக்காததால் லோகேஷ் ராகுல் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். 

அவருக்குப் பதிலாக ரோகித் சர்மாவைத் தொடக்கப் பந்தடிப்பாளராகக் களமிறக்க விரும்புவதாக தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணியின் துணைத் தலைவராகச் செயல்பட்ட ஷுப்மன், தமது அணி கிண்ணத்தைக் கைப்பற்ற முக்கிய பங்காற்றினார். அத்தொடரில் 372 ஓட்டங்களைக் குவித்த இவர், தொடர் நாயகன் விருதையும் தனதாக்கினார்.

இந்நிலையில், அண்மையில் தென்னாப்பிரிக்க ‘ஏ’ - இந்திய ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான போட்டிகளிலும் இவரது செயல்பாடு அருமையாக இருந்தது. 

“இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது எதிர்பாராத ஒன்றல்ல. கடந்த ஓராண்டாகவே அதிகமான போட்டிகளில் விளையாடியதால் இந்திய அணியில் இடம் கிடைக்குமா கிடைக்காதா என்பது பற்றி அதிகம் யோசித்ததில்லை. ‘ஏ” அணியில் இடம்பெற்று பல்வேறு அணிகளுக்கு எதிராக விளையாடியது, என்னை தேசிய வீரராக உருமாற்ற பெரும் உதவி செய்தது,” என ஷுப்மன் தெரிவித்தார்.

பலரும் தமக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாகக் கூறிய இவர், ஆயினும் அவர்களைப் போலவே ஆட முயலமாட்டேன் என்றும் ஒவ்வொருவருக்கும் தனி பாணி உள்ளது என்றும் சொன்னார்.

இப்போதைய அணிகளுள் இந்திய அணிதான் ஆகச் சிறந்த அணி எனக் குறிப்பிட்ட இவர், விராத் கோஹ்லி தலைமையின்கீழ் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னார்.

இதுவரை 14 முதல்தரப் போட்டிகளில் ஆடியிருக்கும் இவர் நான்கு சதங்கள், எட்டு அரைசதங்களுடன் 1,443 (சராசரி 72.15) ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

Loading...
Load next