'இளம் வீரர்களுக்கு வாய்ப்பு'

'இளம் வீரர்களுக்கு வாய்ப்பு'

2 mins read

தர்மசாலா: அடுத்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்திய அணி இப்போதே ஆயத்தமாகத் தொடங்கியுள்ளது.

அதற்குமுன் கிட்டத்தட்ட 20 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளதால் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பொருத்தமான வீரர்களை அடையாளம் காண அணித்தலைவர் விராத் கோஹ்லிக்கும் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரிக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில், தென்னாப்பிரிக்க அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் அதற்கு முதல் படியாக அமைந்துள்ளது. இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் இன்றிரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கோஹ்லி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா என அனுபவ ஆட்டக்காரர்கள் சிலர் மட்டுமே அணியில் இடம்பெற்று உள்ளனர். இதனால், வாய்ப்பைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, அணியில் இடத்தை உறுதிசெய்ய இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதற்கேற்ப, இளம் வீரர்களுக்கு வாய்ப்புத் தரப்படும் என்றும் கோஹ்லியும் தெரிவித்துள்ளார். "கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக உள்ளூர்ப் போட்டிகளிலும் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியவர்களுக்கு வாய்ப்புத் தர விரும்பு

கிறோம். பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு என எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஓர் அணியை அடையாளம் காண்பதே இலக்கு. மற்ற அணிகளில் ஒன்பதாம் நிலை வீரரும் பந்தடிக்க முடியும்போது, இந்திய அணியிலும் ஏன் அப்படி இருக்கக்கூடாது? என்ன முடிவு எடுத்தாலும் அது எதிர்கால நோக்கிலேயே இருக்கும்," என்று செய்தியாளர்களிடம் கோஹ்லி கூறினார். இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி ஓய்வு பெறக்

கூடும் எனப் பேச்சு அடிபடும் நிலையில் அதுபற்றிக் கேட்டதற்கு, "விளையாடுவதை எப்போது நிறுத்த வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். டோனி எப்போதுமே இந்திய கிரிக்கெட்டைப் பற்றி நினைக்கக்கூடியவர். அனுபவத்திற்கு மாற்று எதுவுமில்லை," என்றார் அவர். இந்திய அணி விவரம்: விராத் கோஹ்லி (அணித்தலைவர்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பன்ட், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.