உலக வெற்றியாளர் போட்டிகளில் 2வது தங்கம்

உலக வெற்றியாளர் போட்டிகளில் 2வது தங்கம்

1 mins read
f52b6089-b48e-448d-b839-4ce2701b367d
தங்கம் வென்று சாதித்த மகிழ்ச்சியில் சிங்கப்பூரின் யிப் பின் சியூ. படம்: மார்க் மோரிஸ்/ஸ்போர்ட்ஸ் நியூஸ் ஏஜென்சி -

லண்டன்: உடற்குறையுள்ளோருக்கான உலக பாரா நீச்சல் வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூர் வீராங்கனை யிப் பின் சியூ, 27, இரண்டாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 50 மீட்டர் மல்லாந்து நீச்சல் எஸ்2 போட்டியில் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 4.43 வினாடிகளில் கடந்து முதலாவதாக வந்தார் யிப். இத்தாலியின் ஏஞ்சலோ புரொசிடா, கனடாவின் அலி வான் விக்ஸ்மார்ட் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

இந்தப் போட்டியில் உலக சாதனைக்குச் சொந்தக்காரரும் யிப்தான். 2016ஆம் ஆண்டு நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் இவர் பந்தய தூரத்தை 59.38 வினாடிகளில் கடந்திருந்தார்.

கடந்த 9ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடையவிருக்கும் உலக பாரா நீச்சல் வெற்றியாளர் போட்டிகள் 2019ல் யிப் ஏற்கெனவே ஒரு தங்கத்தையும் வென்றிருந்தார். கடந்த புதன்கிழமை நடந்த 100 மீ. மல்லாந்து நீச்சல் எஸ்2 பிரிவிலும் இவர் தங்கத்தைக் கைப்பற்றினார்.

ஒட்டுமொத்தத்தில், உலக பாரா நீச்சல் வெற்றியாளர் போட்டிகளில் இவர் இதுவரை மூன்று தங்கப் பதக்கங்களையும் இரு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

"அற்புதமான தருணம் இது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதக்கம் வென்றிருப்பது உண்மையிலேயே போனஸ்தான். இரு போட்டிகளில் கலந்துகொண்டு, அவ்விரண்டிலும் தங்கம் வென்றுள்ளேன். இதைவிட வேறு என்ன வேண்டும்?" என்றார் யிப்.