இந்திய இளையர் அணி வெற்றி

கொழும்பு: இளையருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், பங்ளாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி ஏழாவது முறையாக வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று  முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பந்தடிப்பைத் தேர்வு செய்து, 32.4 ஓவர்களில் 106 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து, 107 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்ளாதேஷ் அணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 101 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஐந்து ஓட்ட வித்தியாசத்தில் பங்ளாதேஷ் தோல்வியை தழுவியது.