இபிஎல்: வெற்றியை நழுவவிட்ட ஆர்சனல்

இபிஎல்: வெற்றியை நழுவவிட்ட ஆர்சனல்

2 mins read
1781d168-ee06-4f83-aac4-4ca106377991
ஆர்சனலின் இரண்டாவது கோலைப் போடும் பியா எமெரிக் ஒபமயாங். படம்: ராய்ட்டர்ஸ் -

வாட்ஃபர்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) நேற்று முன்தினம் நடைபெற்ற வாட்ஃபர்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல்களைப் போட்டு முன்னணி வகித்த ஆர்சனல், இறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

வாட்ஃபர்ட் குழுவை வீழ்த்தியிருந்தால் இபிஎல் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு ஆர்சனல் முன்னேறியிருக்கும். ஆனால், ஆட்ட முடிவு சமநிலையானதால் எட்டுப் புள்ளிகளுடன் பட்டியலின் ஏழாவது நிலையில் ஆர்சனல் உள்ளது.

பட்டியலில் ஆர்சனலுக்கு மேலே உள்ள டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், மான்செஸ்டர் யுனைடெட், லெஸ்டர் சிட்டி, செல்சி ஆகிய குழுக்களும் எட்டுப் புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் ஆர்சனல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வாட்ஃபர்ட் உடனான ஆட்டத்தின் முதற்பாதியில் பியா எமெரிக் ஒபமயாங் இரு கோல்களை அடித்து ஆர்சனலுக்கு வலுவான முன்னணியைத் தந்தார். எனினும், ஆர்சனல் வீரர்களின் கவனக்குறைவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வார்ட்ஃபர்ட் வீரர்கள், இரு கோல்களைப் போட்டு ஆர்சனலின் வெற்றியை தகர்த்தனர்.

பிரிமியர் லீக்கில் தாக்குதல் பாணிக்கு ஆர்சனல் பெயர் பெற்றிருந்தாலும், அதன் தற்காப்பு பலவீனமாக இருப்பதால் பல ஆட்டங்களில் அக்குழுவால் வெற்றி பெற முடியவில்லை.

இபிஎல் பட்டியலில் இரு புள்ளிகளுடன் கடைசி நிலையில் இருக்கும் வாட்ஃபர்ட், இந்தப் பருவத்தின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய காத்திருக்கிறது.

போர்ன்மத் வெற்றி

நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் எவர்ட்டன் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் போர்ன்மத் வீழ்த்தியது.

ஆர்சனலைப் போலவே ஆட்டத்தை வலுவான நிலையில் எவர்ட்டன் தொடங்கியிருந்தாலும், தற்காப்பில் நிலவும் குறைபாட்டினால் அது போர்ன்மத் குழுவிடம் சறுக்கியது.

பட்டியலில் ஏழு புள்ளிகளுடன் போர்ன்மத் எட்டாவது இடத்திலும் எவர்ட்டன் 11வது நிலையிலும் உள்ளன.