புதுடெல்லி: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய வீரர் ரிஷப் பன்ட் குறித்து அவ்வணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
பந்தடிப்பு தொடர்பாக ரிஷப் பன்ட் எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் அணிக்குப் பாதகமாக முடிந்து விடுகிறது என ரவி சாஸ்திரி தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதியான அணியைத் தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் முனைப்பு காட்டியுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு 30 டி20 போட்டிகளில் மட்டுமே இந்தியா களமிறங்குவதால் அதற்குள் முடிந்தவரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களது திறமையை அறிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி, அணித் தலைவர் விராத் கோஹ்லி விரும்புகின்றனர்.
விக்கெட்காப்பாளர் இடத்திற்கு ரிஷப் பன்ட்டைத் தேர்வு செய்துள்ளனர். அவருக்குப் போதுமான அளவு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பந்தடிப்பு தொடர்பாக ரிஷப் பன்ட் எடுக்கும் சில முடிவுகள் சில நேரங்களில் அணிக்குப் பாதகமாக முடிந்து விடுகிறது என தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார்.
''டிரினிடாட்டில் நடைபெற்ற போட்டியில் அவரது பந்தடிப்பைப் பார்த்தீர்கள் என்றால், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அந்தப் பந்தடிப்பு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இரண்டு மூன்று முறை அதேபோன்று முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.
"பந்தடிப்பு தொடர்பாக ஆட்டக்காரர்கள் எடுக்கும் முடிவு அணியைத் தோல்வி அடையச் செய்யக்கூடும். அத்தகைய முடிவு ஆட்டக்காரர்களைக் கீழ்நோக்கி கொண்டு செல்லும் என்று அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இது அவர்களுக்கு வலியுறுத்தப்படும். ஒருமுனையில் விராத் கோஹ்லி நிலையாக நின்றுகொண்டிருக்கும்போது, மறுமுனையில் ரிஷப் பன்ட் ஆட்டமிழந்தார்.
"அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 22.3 ஓவர்களில் 164 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அப்படி ஆட்டமிழக்கும்போது அணிக்குப் பாதகமான நிலை ஏற்படுகிறது. களத்தில் நின்று போட்டியைச் சிறப்பாக முடித்து வைக்க சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது.
"போட்டி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியம். சில குறிப்பிட்ட தருணங்களில் பந்தடிப்பு தொடர்பாக எடுக்கும் முடிவு மிகவும் முக்கியமானது.
"அதை ரிஷப் பன்ட் புரிந்து கொள்ளாதவரை, அவரால் தம்மைச் சரிபடுத்திக்கொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ள எத்தனை போட்டிகளில் ஆட வேண்டும் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். அது ஒரு போட்டியாக இருக்கலாம், நான்கு போட்டிகளாக இருக்கலாம். அதைத் தாண்டி இருக்குமென நான் கருதவில்லை. அவர் கற்றுக்கொள்வார். அவர் போதுமான அளவிற்கு ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார். இப்போது அவருக்கான நேரம் வந்துள்ளது. உலகரங்கில் மிகவும் அபாயகரமான பந்தபடிப்பாளர் என்பதை அவர் வெளிக்காட்ட வேண்டும்," என்றார் ரவி சாஸ்திரி.
''ரிஷப் பன்ட் அவரது அணுகுமுறை மற்றும் வழக்கமான ஆட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது எதிர்பார்ப்பு அல்ல. ஆனால், சிறந்த முறையில் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
"சூழ்நிலையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரே எதிர்பார்ப்பு. நாம் என்ன நினைக்கிறோமோ, அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. சூழ்நிலையை ஆராய்ந்து, அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான சொந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். கடினமான சூழ்நிலையில் ரிஷப் பன்ட்டைப் போன்ற வீரர்கள் ஐந்து பவுண்டரிகள் விளாசுவார்கள்.
"ஆனால், நான் அந்த சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு ஓட்டங்கள்தான் அடித்து எதிர்முனையில் நிலையாக நின்று கொள்வேன்.
"ஆகவே, ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வழக்கமான ஆட்டங்கள் உண்டு. ஆனால் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு முடிவுகளை எடுக்க வேணடும் என்பது அனைத்து வீரர்களிடம் இருந்து அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அதில் நானும் அடங்குவேன்," என்று விராத் கோஹ்லி தெரிவித்தார்.

