புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் பந்தடிப்பாளர் மற்றும் விக்கெட் காப்பாளருமான தினேஷ் கார்த்திக், ஐபிஎல் போட்டியில் இந்தி நடிகர் ஷாருக் கானுக்குச் சொந்தமான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக உள்ளார்.
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் சில ஆட்டங்களைப் பார்க்க தினேஷ் கார்த்திக் அங்கு சென்றார். டிரின்பகோ அணி, கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக் கானுக்குச் சொந்தமானதாகும்.
டிரின்பகோ அணியின் சீருடையுடன் அவர்களது ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் இருக்கும் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து சர்ச்சை கிளம்பியது.
ஐபிஎல் தவிர வேறு எந்த தனியார் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் அது தொடர்பான நிகழ்வுகளிலும் வீரர்கள் கலந்துகொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருக்கும் அவர் அனுமதி பெறாமல் சென்றதால் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விதிமுறையை மீறி நடந்துகொண்டதற்காக மன்னிப்பு கேட்டார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் தினேஷ் கார்த்திக் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்றும் இந்த பிரச்சினை இத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இதனால் தினேஷ் கார்த்திக் சிக்கலில் இருந்து தப்பினார்.

