டி20 அணியில் இடம்பெறுவது குறித்து கங்குலி அறிவுரை: இளம் வீரர்கள் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும்

டி20 அணியில் இடம்பெறுவது குறித்து கங்குலி அறிவுரை: இளம் வீரர்கள் தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும்

2 mins read
620b0469-ae5f-48be-86ce-f3850c1302b8
கோஹ்லி தற்போது உலகின் சிறந்த வீரராக திகழ்கிறார். அது நமக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது எனக் கூறுகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி. படம்: ஏஎப்பி -

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் டி20 வீரர்களின் வரிசை ஒருநாள் போட்டிகளில் இருப்பது போன்று அல்லாமல் சற்று மாறுபட்ட கலவையாக உள்ளது. அணியில் ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை விளையாட வைக்கும் இந்திய அணி, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்காக அவர்களைத் தயார் செய்து வருகிறது.

இந்நிலையில், அந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இளம் வீரர்கள் குறித்து முன்னாள் அணித் தலைவர் சவுரவ் கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

"நமது அணியில் உள்ள இளம் வீரர்கள் பலர் சிறப்பான வீரர்கள். அவர்களுக்கு தேவையான வாய்ப்பு அளித்து அவர்களின் ஆட்டத்தில் முன்னேற்றம் அடையவைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள வீரர்களில் தவான், ரோகித், ஜடேஜா மற்றும் பாண்டியா ஆகியோர் தங்களின் ஆற்றலை நிரூபித்துவிட்டனர். அவர்களைப் போன்று இளம் வீரர்களும் தங்களது இடத்தை உறுதிசெய்து தங்களை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

"அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே அவர்கள் உலகக் கிண்ண அணியில் இடம்பிடிக்க முடியும். எனவே, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்கள் சாதிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், இதனை அவர்கள் ஒரு அடித்தளமாக கொண்டு தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா என்பது குறித்த கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.

"முதலில் ரவி சாஸ்திரி தனது பயிற்சி காலத்தை நிறைவு செய்யட்டும். அதன் பிறகு நாம் அடுத்த பயிற்சியாளர் பற்றி சிந்திக்கலாம். எது எப்படியோ நான் ஏற்கெனவே ஒரு பயிற்சியாளர்தான். ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கடந்த பருவம் பயிற்சியாளர் பணியைக் கவனித்தேன். கடந்த ஏழு ஆண்டுகளாக டெல்லி அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், எனது பயிற்சி காலத்தில் அந்த அணி 'பிளே-ஆஃப்' சுற்று வரை முன்னேறியது," என்று அவர் கருத்துரைத்தார்.

இந்நிலையில், மூத்த வீரர் டோனி தனது ஓய்வு குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது குறித்தும் கங்குலி பேசினார்.

"இந்த விஷயத்தில் தேர்வாளர்கள் மற்றும் கோஹ்லி என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டில் இவர்கள் முக்கியமானவர்கள். அதனால் டோனியின் எதிர்காலம் குறித்து இவர்கள் முடிவு செய்யலாம்," என்றார் அவர்.

கோஹ்லி-ஸ்டீவ் ஸ்மித் ஒப்பீடு குறித்து கேள்வி எழுப்பியபோது, "இத்தகைய கேள்விகள் பதிலுக்கு உகந்தவை அல்ல. இது ஆட்டத்திறன் பற்றியது. கோஹ்லி தற்போது உலகின் சிறந்த வீரராக திகழ்கிறார். அது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

ஸ்மித்தைப் பொறுத்தவரை சாதனைகளே அவரை பற்றி பேசும். இப்போதே அவர் 26 டெஸ்ட் சதங்களை அடித்திருப்பது வியப்புக்குரியது' என்றார் கங்குலி.