அஸ்தானாவின் பிடிவாதத்தை தகர்த்தெறிந்த கிரீன்வுட் கோல்

மான்செஸ்டர்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கசக்ஸ்தான் லீக் ஜாம்பவானான அஸ்தானாவை அது 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.

ஆனால் இந்த வெற்றியைப் பெற யுனைடெட் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

அதிலும் நட்சத்திர வீரர்களுக்குப் பதிலாக இளம் வீரர்கள் பலர் யுனைடெட்டுக்காக இந்த ஆட்டத்தில் களமிறக்கப்பட்டதால் கோல் போடுவது சவால்மிக்க காரியமானது.

யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குறைந்தது சமநிலை கண்டு ஒரு புள்ளியாவது பெற்றுத் திரும்ப வேண்டும் என்ற முனைப்புடன் அஸ்தானா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர்.

இந்நிலையில், ஆட்டம் முடிய 17 நிமிடங்கள் மட்டும் எஞ்சியிருந்த 17 வயது மேசன் கிரீன்வுட் கோல் போட்டு யுனைடெட்டுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

இதன் மூலம் ஐரோப்பியக் காற்பந்துப் போட்டி ஒன்றில் யுனைடெட்டுக்காக கோல் போட்ட ஆக இளைய வீரர் எனும் பெருமை கிரீன்வூட்டைச் சேரும்.

“பந்தை வலைக்குள் சேர்க்கும் திறன் கொண்ட எங்கள் வீரர்களில் கிரீன்வுட்டும் ஒருவர் என்று எங்களுக்கு தெரியும்,” என்று வாய்ப்பு கிடைத்தபோது நிதானத்தைக் கைவிடாமல் கோல் போட்ட கிரீன்வுட்டைப் பாராட்டினார் யுனைடெட்டின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார்.

“எங்களது இளம் வீரர்களுக்கு இந்த ஆட்டம் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. 

“இத்தகைய ஆட்டங்களில், முதல் 20 நிமிடங்களிலேயே கோல்களைப் போட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும். ஆனால் கிடைத்த வாய்ப்புகளை எங்கள் ஆட்டக்காரர்கள் நழுவவிட்டனர். எங்கள் இளம் ஆட்டக்காரர்களுக்குக் கூடுதல் அனுபவம் தேவை என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

“வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று சோல்சியார் தெரிவித்தார்.

மற்றோர் ஆட்டத்தில் ஜெர்மனியின் ஐன்டிராக் ஃபிராங்ஃபர்ட் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் பந்தாடியது.

ஜோ வில்லோக், சாக்கா, பியர் எமெரிக் ஒபமயாங் ஆகியோர் ஆர்சனலுக்காக கோல்களைப் போட்டு ஃபிராங்ஃபர்ட் குழுவின் கதையை முடித்து வைத்தனர்.

ஃபிராங்பர்ட் வீரர் டோமினிக் கோருக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டதால் ஆட்டத்தில் கடைசி 11 நிமிடங்களில் ஃபிராங்ஃபர்ட் 10 வீரர்களுடன் விளையாடியது.