‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு ஹேமில்டன் குறி

சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயத்தில் ஹாட்ரிக் வெற்றிக்கு உலக வெற்றியாளரும் மெர்செடிஸ் அணியின் ஓட்டுநருமான லுவிஸ் ஹேமில்டன். 2017, 2018ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் நடைபெற்ற பந்தயத்தில் இவர் வாகை சூடினார்.

நாளை நடைபெறும் பந்தயத்தில் மற்ற ஓட்டுநர்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் நிலையில் முடிக்க இவர் முனைப்புடன் இருக்கிறார்.

இருப்பினும், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவர் எப்போதும் போல எவ்வித பரபரப்பும் பதற்றமும் இன்றி அமைதியாகக் காணப்பட்டார்.

ஐந்து முறை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ள ஹேமில்டன், ஓட்டுநர்களுக்கான புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

இப்பருவத்தில் இதுவரை நடைபெற்ற எட்டு எஃப்1 கார் பந்தயங்களில் ஆறு பந்தயங்களை இவர் கைப்பற்றினார். ஆகக் கடைசியாக நடந்து முடிந்த இரண்டு பந்தயங்களில் இவர் முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

நாளைய பந்தயத்தில் ஃபெராரி, ரெட் புல் ஆகிய அணிகள் தமக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஹேமில்டன் தெரிவித்தார்.