லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சௌத்ஹேம்டனை 3-1 எனும் கோல் கணக்கில் போர்ன்மத் வீழ்த்தியது.
இதன்மூலம் லீக் பட்டியலின் மூன்றாவது இடத்துக்கு போர்ன்மத் முன்னேறியுள்ளது.
சௌத்ஹேம்டனின் விளையாட்டரங்கத்தில் போர்ன்மத் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல்முறை.
ஆட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் போர்ன்மத் கோல் போட்டு சௌத்ஹேம்டனைத் தடுமாற வைத்தது.
இடைவேளையின்போது 2-0 எனும் கோல் கணக்கில் போர்ன்மத் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் சௌத்ஹேம்டனுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை கோலாக்கினார் வார்ட் பிரோஸ். அதனைத் தொடர்ந்து ஆட்டத்தைச் சமன்செய்ய சௌத்ஹேம்டன் தீவிர முயற்சி எடுத்தது.
ஆனால் கடைசிவரை போர்ன்மத் விட்டுக்கொடுக்கவில்லை.
ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டும் எஞ்சி இருந்தபோது போர்ன்மத் அதன் மூன்றாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது.
"முற்பாதி ஆட்டத்தில் நாங்கள் நன்றாக விளையாடினோம். இருப்பினும், எங்களது திறமையை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. ஆனால் முனைப்புடன் விளையாடினோம். அதுவே மிக முக்கியம்," என்று போர்ன்மத் குழுவின் நிர்வாகி ஹாவி தெரிவித்தார்.
போர்ன்மத் குழு இன்னும் கூடுதல் கோல்கள் போட்டிருக்கலாம். ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் ஜோஷ்வா கிங் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
ஆனால் காணொளி பயன்படுத்தி கோல் செல்லுமா என்று சரிபார்த்த நடுவர் 'ஆஃப்சைட்' காரணமாக கோலை நிராக
ரித்தார்.

