ரக்பி: ஃபிஜியைப் போராடி வென்ற ஆஸ்திரேலியா

ரக்பி: ஃபிஜியைப் போராடி வென்ற ஆஸ்திரேலியா

1 mins read
a8b7201a-9b6d-4d3c-9f83-9ab970d8e4ef
புள்ளிகளைக் குவிக்கப் பந்தைத் தூக்கிக்கொண்டு புயல் வேகத்தில் ஓடும் ஆஸ்திரேலியாவின் மரிக்கா கொரோய்பேட்டேயிடமிருந்து (வலது) பந்தைப் பறிக்க பாயும் ஃபிஜியின் ஜோஷ்வா துயிசோவா. படம்: ஏஎஃப்பி -

தோக்கியோ: உலகக் கிண்ண ரக்பி போட்டியில் ஆஸ்திரேலியா 39-21 எனும் புள்ளிக் கணக்கில் ஃபிஜியை நேற்று வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டியை ஆஸ்திரேலியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஃபிஜியின் பெசேலி யாட்டோ சிறப்பாக விளையாடி தமது அணிக்காகப் புள்ளிகளைக் குவித்தார். ஆரம்பத்திலேயே ஃபிஜி 8-0 என முன்னிலை வகித்தது.

ஆகக் கடைசியாக 1954ஆம் ஆண்டில் ஃபிஜியிடம் ஆஸ்திரேலியாவிடம் ஒரே ஒருமுறை தோற்றது. மீண்டும் தோல்வியில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, அந்த எண்ணத்தை உதறித் தள்ளிவிட்டு ஆஸ்திரேலியா போராடியது.

ஃபிஜிக்காக மிக அற்புதமாக விளையாடிய யாட்டோ, ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் ரீஸ் ஹோட் மீது மோதினார். இதன் விளைவாக அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

இடைவேளையின்போது 14-12 எனும் புள்ளிக் கணக்கில் ஃபிஜி முன்னிலை வகித்தது.

பிற்பாதி ஆட்டத்தில் புள்ளிகளைக் குவித்த ஆஸ்திரேலியா வெற்றியை உறுதி செய்தது.

வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஃபிஜி தோல்வி அடைய முக்கிய காரணமாக இருந்த ஆஸ்திரேலியத் தாக்குதல் ஆட்டக்காரர் மரிக்கா கொரோய்பேட்டே ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா அதன் அடுத்த ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் மோதுகிறது.