ஹராரே: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 42 பந்துகளில் 71 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்த மகிழ்ச்சியோடு விடைபெற்றார் ஸிம்பாப்வே அணித் தலைவர் மசகட்சா.
பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரோடு அனைத்துலக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஸிம்பாப்வே அணித் தலைவர் மசகட்சா தெரிவித்திருந்தார்.
ஸிம்பாப்வே நேற்று தனது கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் 156 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸிம்பாப்வே களம் இறங்கியது.
மசகட்சா கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடினார்.
அதன்படி தொடக்கத்திலிருந்தே அவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
27 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்த மசகட்சா, 42 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவரது அதிரடி ஆட்டத்தால் ஸிம்பாப்வே 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸிம்பாப்வே அணிக்கான தனது கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதோடு, அணியை வெற்றி பெற வைத்த மகிழ்ச்சியோடு வெளியேறினார் மசகட்சா.
பல ஆட்டங்களில் ஸிம்பாப்வே அணிக்குத் தலைவராக இருந்து ஓய்வுபெறும் மசகட்சாவை சக ஆட்டக்காரர்கள் கௌரவித்தனர்.

