பரிதாப நிலையில் பார்சிலோனா

பரிதாப நிலையில் பார்சிலோனா

2 mins read
ea3ba0c8-52ed-4d2f-83c9-d733a4467918
பார்சிலோனாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பியும் அவரால் அணியைக் கரைசேர்க்க முடியவில்லை. படம் : ராய்ட்டர்ஸ் -

கிரனாடா (ஸ்பெயின்): நடப்பு ஸ்பானிய லா லீகா காற்பந்து வெற்றியாளரான பார்சிலோனா குழு, 1994-95 பருவத்திற்குப் பிறகு ஆக மோசமான தொடக்கத்தைக் கண்டுள்ளது.

இந்தப் பருவத்தில் லா லீகாவிற்கு முன்னேறிய கிரனாடா குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோற்று அதிர்ச்சியளித்தது. இதுவரை ஐந்து போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வி, ஒன்றில் சமநிலை கண்ட அக்குழு, ஏழு புள்ளிகளுடன் பட்டியலின் ஏழாம் நிலையில் இருக்கிறது.

மாறாக, மூன்று ஆட்டங்களில் வென்றுள்ள கிரனாடா பத்துப் புள்ளிகளுடன் முதல் நிலைக்கு முன்னேறியது (நேற்றைய ஆட்டங்களுக்கு முந்தைய நிலவரம்).

ஆட்டத்தின் இரண்டாம் நிமிடத்திலேயே கோலடித்து கிரனாடாவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார் ரமோன் அஸீஸ். பிற்பாதியில் பார்சிலோனா ஆட்டக்காரர் அர்ட்டுரோ விடாலின் கையில் பந்து பட்டதால் கிரனாடாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. வடிலியோ அதைத் தவறவிடாது கோலாக்க, கிரனாடாவின் வெற்றி உறுதியானது.

பார்சிலோனாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பியும் அவரால் அணியைக் கரைசேர்க்க முடியவில்லை. அட்லெட்டிகோ மட்ரிட் குழுவில் இருந்து இந்தப் பருவத்தில் 120 மில்லியன் யூரோ தொகைக்கு பார்சிலோனாவால் வாங்கப்பட்ட பிரெஞ்சுத் தாக்குதல் ஆட்டக்காரர் அன்டுவான் கிரீஸ்மன் இன்னும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை என்பது கவலை தரும் விஷயம்.

"இந்தத் தோல்வி எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. வரும் ஆட்டங்களில் மீண்டெழுந்து புள்ளிகளைப் பெற வேண்டும் எனில் எங்களது செயல்பாட்டை நாங்களே மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம்," என்று கவலையுடன் தெரிவித்தார் சுவாரெஸ்.

கடந்த சில ஆண்டுகளில் தங்களது செயல்பாட்டைப் பார்க்கும்போது இது மோசமான புள்ளிவிவரம் என ஒப்புக்கொண்ட பார்சிலோனா நிர்வாகி எர்னெஸ்டோ வல்வெர்டே, குறிப்பாக எதிரணி அரங்குகளில் ஆடும் ஆட்டங்களில் நல்ல முடிவுகளைப் பெற முயலவேண்டும் என்றார்.

முன்னதாக நடந்த ஆட்டத்தில் செல்ட்டா வீகோவுடன் கோலேதுமின்றி சமநிலை கண்டதால் பட்டியலின் முதல் நிலைக்கு முன்னேறும் வாய்ப்பைப் பறிகொடுத்தது. கடைசியாக விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் அக்குழுவால் வெற்றியை எட்ட முடியவில்லை.