மான்செஸ்டர்: கடந்த வாரயிறுதியில் நார்விச் சிட்டியிடம் தோற்றதால் நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி குழு நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தங்களை விமர்சித்தவர்களுக்கு வார்த்தைகளால் பதில் கூறாமல் காற்பந்துத் திடலில் காட்டிய செயல்பாட்டின்மூலம் மேன்சிட்டி ஆட்டக்காரர்கள் பதிலளித்தனர்.
வாட்ஃபர்ட் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் பெரும் வெற்றியைப் பெற்றது அக்குழு.
அணித் தலைவர் டாவிட் சில்வா ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கோலடித்து, மேன்சிட்டியின் கோல் வேட்டையைத் தொடங்கி வைத்தார். இபிஎல் காற்பந்து வரலாற்றில் இதற்குமுன் இல்லாத வகையில், 18 நிமிடங்களுக்குள்ளேயே ஐந்து கோல்களைப் போட்டு மேன்சிட்டி புதிய சாதனையைப் படைத்தது.
பெர்னார்டோ சில்வா 'ஹாட்ரிக்' கோலடிக்க, செர்ஜியோ அகுவேரோ, ரியாத் மாரெஸ், ஓட்டாமெண்டி, கெவின் டி பிரய்ன ஆகியோரும் தங்கள் பங்காக ஆளுக்கு ஒரு கோல் அடித்தனர்.
போட்டிக்குப் பின் பேசிய மேன்சிட்டி நிர்வாகி கார்டியோலா, "செய்தியாளர்கள், காற்பந்து நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் போட்டிகளில் தோற்பதும் வாழ்வின் ஓர் அங்கம்தான் என்பதைப் புரிந்துகொள்வதில்லை," என ஆதங்கப்பட்டார்.
இன்னோர் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு 1-2 என லெஸ்டர் சிட்டியிடம் மண்ணைக் கவ்வியது.

