சிட்டகாங்: பங்ளாதேஷில் நடந்துவரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் அந்நாட்டு அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியைத் தோற்கடித்தது.
கஞ்சத்தனமாகப் பந்துவீசி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதோடு, ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை விளாசி பங்ளாதேஷ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் அவ்வணியின் தலைவர் ஷாகிப் அல் ஹசன்.
முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த பங்ளாதேஷ் அணியில் ஐவர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் முஷ்பிகுர் ரஹீம் (26), மொசாடெக் ஹொசைன் (19*) ஆகியோரைத் துணையாகக் கொண்டு, அணியை வெற்றிக் கோட்டைத் தொடச் செய்தார் ஷாகிப்.
மூன்றாவது அணியாக ஸிம்பாப்வே பங்கேற்ற இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தானும் பங்ளா
தேஷும் ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டன.
இதனிடையே, நாளை இரவு நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் கான் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் களக்காப்பு செய்தபோது பின்
தொடைத் தசைநாரில் காயமடைந்ததால் அவர் இடையிலேயே திடலைவிட்டு வெளியேற நேர்ந்தது.

