வெற்றிப் பயணத்தைத் தொடரும் லிவர்பூல்

வெற்றிப் பயணத்தைத் தொடரும் லிவர்பூல்

2 mins read
9288f04e-0f7d-42f3-a8e4-c4e6f18958fe
லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் ஃபிர்மினோ (சிவப்புச் சீருடை). படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: செல்சி காற்பந்துக் குழுவிற்கெதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தமது குழு வென்றதற்கு வீரர்களின் தீராத வெற்றி தாகமே உந்துசக்தியாக இருந்தது என்று லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் கூறியுள்ளார்.

செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்திலேயே லிவர்பூல் இரு கோல்களைப் போட்டது. டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்டும் ரொபர்ட்டோ ஃபிர்மினோவும் அந்த கோல்களைப் போட்டனர்.

ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் செல்சியின் இங்கோலோ கோன்டே கோலடிக்க, லிவர்பூலின் முன்னிலை ஒன்றாகக் குறைந்தது. ஆனாலும், லிவர்பூலின் வெற்றியை செல்சியால் தடுக்க முடியவில்லை.

இதன்மூலம் தொடர்ந்து இரு பருவங்களில் முதல் ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற முதல் இபிஎல் குழு என்ற பெருமையை லிவர்பூல் தேடிக்கொண்டது.

இந்த வெற்றி தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றார் கிளோப். "மிகச் சிறப்பான செயல்பாடு. வேறு என்ன சொல்வது? உண்மையிலேயே லிவர்பூல் ஆட்டக்காரர்கள் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும்," என்று அவர் சொன்னார்.

லிவர்பூலைக் காட்டிலும் தமது குழுவின் செயல்பாடு மேம்பட்டதாக இருந்தது என்ற செல்சி நிர்வாகி லாம்பார்ட், விரைவில் வெற்றிப் பாதைக்குத் திரும்புவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற ஆட்டங்களில் ஆர்சனல் 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவையும் லெஸ்டர் சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டையும் தோற்கடித்தன.