மிலான்: அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) ஆகச் சிறந்த காற்பந்து வீரர் விருதை அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த விருதுக்காக ஐந்து முறை வெற்றியாளரான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் லிவர்பூல் தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வேன் டைக்கும் போட்டி போட்டனர்.
ஸ்பானிய லா லீகா காற்பந்துப் போட்டியில் பார்சிலோனாவுக்காக விளையாடும் மெஸ்ஸி, கடந்த பருவத்தில் 58 ஆட்டங்களில் களமிறங்கி 54 கோல்களைப் போட்டார்.
இதன் விளைவாக அவர் ஆக அதிகமான கோல் போட்ட வீரருக்கான விருதைத் தட்டிச் சென்றார். பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கக் குழுவின் துணைத் தலைவரான மேகன் ரெபினோ ஆகச் சிறந்த காற்பந்து வீராங்கனை விருதை வென்றார்.
இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அமெரிக்கா கிண்ணம் ஏந்தியது.
அமெரிக்காவின் வெற்றிக்கு வித்திட்ட வீராங்கனைகளில் ரெபினோவும் ஒருவர்.
"எனது உணர்வை வர்ணிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. பெண்களுக்கான காற்பந்துப் போட்டிகளுக்கு இந்த ஆண்டு மிகச் சிறந்ததாக அமைந்துள்ளது.
"உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்கியது நம்ப முடியாத அனுபவமாக இன்னும் இருக்கிறது.
"போட்டியின்போது எங்களுக்கு இருந்த உற்சாகம் வியக்கத்தக்கதாக இருந்தது.
"காற்பந்து வாயிலாக இவ்வுலகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு இருக்கிறது," என்றார் ரெபினோ.
ஆண்கள் பிரிவில் ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதை லிவர்பூலின் யர்கன் கிளோப் வென்றார்.
பெண்கள் பிரிவில் ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதை அமெரிக்க பெண்கள் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஜில் எலிஸ் தட்டிச் சென்றார்.

