மும்பை: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹென்ரிக்ஸின் தோள்பட்டையில் வேண்டுமென்றே இடித்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்குத் தகுதியிழப்பு புள்ளி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஹென்ரிக்ஸ் தோள்பட்டையில் பலமாக இடித்த கோஹ்லிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் விராத் கோஹ்லி களமிறங்கினார். வழக்கத்திற்கு மாறாக அவர் ஓட்டங்கள் எடுக்க முடியாமல் திணறினார்.
அதேசமயத்தில் ரோகித் சர்மாவை வீழ்த்தி இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஹென்ரிக்ஸ் கோஹ்லிக்கு நெருக்கடி கொடுத்தார்.
இதனால் கோபம் அடைந்த கோஹ்லி ஓட்டம் எடுக்க ஓடியபோது பந்து வீசிய பின் ஆடுகளத்தில் நின்றிருந்த ஹென்ரிக்ஸ் மீது வேகமாக ஓர் இடி இடித்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஹென்ரிக்ஸ், அதைப் பெரிது படுத்தாமல் சிரித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அப்போது போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், கோஹ்லிக்கு எப்படியும் அபராதம் விதிக்கப்படும் என்று பேசிக்கொண்டனர்.
அதன்படியே ஐசிசி கோஹ்லியை எச்சரித்ததுடன், தகுதியிழப்பிற்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐசிசி தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
''இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நன்னடத்தைக்கான விதிமுறையில் முதல்நிலை குற்றத்தை செய்ததற்காக தகுதி இழப்பிற்கான ஒரு புள்ளி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
கோஹ்லி இதற்கு முன் இதுபோன்று இரண்டு முறை தகுதி நீக்கத்திற்கான புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தவான் ஆட்டமிழந்ததும் ரிஷப் பன்ட், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஒரே நேரத்தில் பந்தடிக்க களம் இறங்கியது, தவறாகப் புரிந்துகொண்டதால்தான் என கோஹ்லி தெரிவித்துள்ளார்.
"10 ஓவர்களுக்குப் பின்னர் என்றால் ரிஷப் பன்ட் வர வேண்டும். அதற்கு முன்பு என்றால் ஷ்ரேயாஸ் அய்யர் வரவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்ததாக நினைக்கிறேன். இருவரும் ஆடுகளத்தை நோக்கிச் சென்றபோபோது, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. மேலும், இருவரும் ஆடுகளத்திற்குள் வந்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும். ஏனென்றால், ஆடுகளத்திற்குள் மூன்று பந்தடிப்பாளர்கள் இருந்திருப்போம்.
இருவரும் குழப்பம் அடைந்ததே இதற்குக் காரணம். யார் யார் எப்போது களம் இறங்க வேண்டும் என அவர்கள் இருவரும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை'' என்றார் கோஹ்லி.

