ஸ்பர்சுக்குப் பெருத்த அவமானம்

ஸ்பர்சுக்குப் பெருத்த அவமானம்

2 mins read
c818bf50-688c-4032-b203-1f0948b280d7
பெனால்டி வாய்ப்புகளில் ஸ்பர்ஸ் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் உதைத்த பந்தைத் தடுத்து தமது குழுவிற்கு வெற்றி தேடித் தந்த கோல்செஸ்டர் யுனைடெட் கோல்காப்பாளர் டீன் கெர்க்கன். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: முன்னணி இங்கிலிஷ் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், நான்காம் நிலைப் போட்டிகளில் விளையாடி வரும் கோல்செஸ்டர் யுனைடெட் குழுவிடம் 4-3 என பெனால்டி வாய்ப்புகளில் தோற்று, லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இருந்து வெளியேறி, பெரும் தலைக்குனிவைச் சந்தித்தது.

கடந்த வார இறுதியில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் லெஸ்டர் சிட்டியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த ஸ்பர்ஸ், கோல்செஸ்டருக்கு எதிரான லீக் கிண்ண மூன்றாம் சுற்றுப் போட்டியில் அபார வெற்றி பெற்று, ஆறுதல் தேடிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கோல்செஸ்டரின் தற்காப்பு அரணை மீறி ஸ்பர்ஸ் குழுவினரால் ஒரு கோல்கூட போட முடியவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

ஆட்டம் 0-0 என முடிந்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்புகள் முறை பின்பற்றப்பட்டது.

இதில், ஸ்பர்ஸ் குழுவின் முன்னணி வீரர்களுள் ஒருவரான கிறிஸ்டியன் எரிக்சன் உதைத்த பந்தை அற்புதமாகப் பாய்ந்து தடுத்தார் கோல்செஸ்டர் கோல் காப்பாளர் டீன் கெர்க்கன். லூக்கஸ் மோரா உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்ப, இறுதியில் 4-3 என்ற கணக்கில் ஸ்பர்ஸ் தோற்று அதிர்ச்சியளித்தது.

இந்தப் பருவத்தில் இதுவரை எட்டு ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்பர்ஸ் அவற்றுள் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது.

"90 நிமிடங்களில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது," என்றார் ஸ்பர்ஸ் நிர்வாகி பொக்கெட்டினோ.

நேற்று அதிகாலை நடந்த இன்னோர் ஆட்டத்தில் 18 வயதான பிரேசில் ஆட்டக்காரர் கேப்ரியல் மார்ட்டினெல்லி இரு கோல்களை அடிக்க, 5-0 என்ற கணக்கில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவைப் பந்தாடியது ஆர்சனல்.

மற்ற ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் பிரஸ்டன் எண்ட் குழுவையும் எவர்ட்டன் 2-0 என்ற கணக்கில் ஷெஃபீல்ட் வென்ஸ்டே குழுவையும் தோற்கடித்தன.