மட்ரிட்: கடந்த வாரயிறுதியில் நடந்த ஸ்பானிய லா லீகா காற்பந்து ஆட்டத்தில் கிரனாடா குழுவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பட்டி
யலில் நான்காம் நிலைக்கு முன்னேறியது பார்சிலோனா குழு.
ஆட்டத்தில் வென்றபோதும் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி காயமடைந்து, பாதியிலேயே வெளியேறியது அக்குழுவிற்குக் கவலையளித்துள்ளது.
கிரனாடா குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராகக் களம் கண்ட மெஸ்ஸி, இந்தப் பருவத்தில் நேற்றைக்குத்தான் முதல் பதினொரு ஆட்டக்காரர்களில் ஒருவராக இடம்பெற்றார்.
ஆயினும், தொடைக் காயத்திற்காக முற்பாதி ஆட்டத்தின்போதே அவர் மருத்துவச் சிகிச்சை பெற்றார். இடைவேளைக்குப் பின் அவர் திடலுக்குத் திரும்பவில்லை. அவருக்குப் பதிலாக டெம்பேலே களமிறங்கினார்.
அடுத்த மாதத்தில் சில முக்கியமான ஆட்டங்கள் வரவிருக் கும் நிலையில், மெஸ்ஸிக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து விரைவில் தெரியவரும் என்று பார்சிலோனா நிர்வாகி வல்வெர்டே தெரிவித்துள்ளார்.
வரும் சனிக்கிழமை கெடாஃபே உடன் லா லீகா ஆட்டத்தில் மோதும் பார்சிலோனா, அடுத்த வார மத்தியில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவையும் அக்டோபர் 27ல் ரியால் மட்ரிட் குழுவையும் எதிர்கொள்கிறது.

