தப்பிப் பிழைத்தது மான்செஸ்டர் யுனைடெட்

தப்பிப் பிழைத்தது மான்செஸ்டர் யுனைடெட்

2 mins read
451101db-c146-4dcc-b471-a9772f082c43
நேற்றைய ஆட்டத்தின் முதல் கோலைப் போட்ட மான்செஸ்டர் யுனைடெட்டின் மேசன் கிரீன்வுட். படம்: ஏஎஃப்பி -

மான்செஸ்டர்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டம் நேற்று அதிகாலை யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் காற்பந்து லீக்கின் மூன்றாம் நிலையான லீக் ஒன் பிரிவில் உள்ள ரோச்டேல் குழுவுடன் மோதியது.

எளிதில் வென்றுவிடக்கூடிய இந்த ஆட்டத்தில் யுனைடெட் குழு தப்பிப் பிழைத்தது என்று கூறினால் அது மிகையாகாது என காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆட்டத்தின் 68ஆம் நிமிடத்தில் மேசன் கிரீன்வுட் என்ற யுனைடெட்டின் வளர்ந்து வரும் இளம் தாக்குதல் ஆட்டக்காரர் ஒரு கோல் போட்டதும் இனி நமக்கு வெற்றிதான் என இறுமாந்திருந்த யுனைடெட் ரசிகர்களுக்கு அடுத்த எட்டாவது நிமிடத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி.

எதிரணி ரோச்டேல் குழுவின் 16 வயது பாலகனான மேத்திசன் தமது குழுவின் பங்குக்கு ஒரு கோல் போட ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது.

அதன்பின் மான்செஸ்டர் யுனைடெட்டின் பிரபல ஆட்டக்காரர்கள் அனைவரும் தங்களது கோல் போடும் முயற்சியில் சோடைபோக ஆட்டம் முழு நேரம் வரை 1-1 என்ற கோல் நிலையிலேயே இருந்தது.

பின்னர் ஒரு வழியாக பெனால்டி வாய்ப்புகளில் மான்செஸ்டர் யுனைடெட்டின் அனைத்து வீரர்களும் தங்கள் குழுவின் சார்பாக கோல் போட்டதாலும் ரோச்டேல் குழுவின் ஒரு பெனால்டி வாய்ப்பை யுனைடெட்டின் கோல்காப்பாளர் ரோமேரோ தடுத்ததாலும் இறுதியில் யுனைடெட் குழு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அழாத குறையாக வெற்றி பெற்றது.

எதிரணி கோல் வலையை நோக்கி 31 முறை பந்தை உதைத்தும் கோல் போட முடியாத அவல நிலையில் யுைனடெட் வீரர்கள் தலையைக் கவிழ்த்தபடி மைதானத்தை விட்டு வெளியேற ரோச்டேல் குழுவின் ரசிகர்கள் தங்கள் வீரர்களுக்கு பலத்த கைதட்டலை பரிசாக வழங்கினர்.

யுனைடெட்டின் மத்திய திடல் ஆட்டக்காரரும் குழுவின் முக்கிய வீரர் எனக் கருதப்படுபவருமான பால் போக்பா கோல் போடும் அருமையான வாய்ப்பை வீணடித்தார் என்று கூறப்படுகிறது.

அதேபோல், அதிகமாக களம் காணாத மார்க்கஸ் ரோகோ என்ற அர்ஜெண்டீனிய தற்காப்பு ஆட்டக்காரர் ரோச்டேல் கோல் வலையை நோக்கி உதைத்தபோதெல்லாம் அது கோல் வலையை எட்டிப் பார்க்காது வேறு எங்கோ சென்றதாக காற்பந்து ரசிகர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இந்நிலையில், நேற்று யுனைடெட் பெற்ற வெற்றியும் பெரிதாக கொண்டாட ஒன்றுமில்லை என்கின்றனர் காற்பந்து ரசிகர்கள். ஏனெனில், அடுத்த சுற்றில் யுைனடெட் செல்சியை எதிர்கொள்ள வேண்டும். யுனைடெட்டின் தற்போதைய நிலையைப் பார்த்தால் அந்தக் குழுவால் செல்சியைத் தாண்டிச் செல்ல முடியுமா என்ற நியாயமான சந்கேத்தை இவர்கள் கிளப்புகின்றனர்.