சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) வினோத் ராய் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு நிர்வகித்து வருகிறது. உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த நிர்வாகக் குழு பி.சி.சி.ஐ.யை நடத்தி வருகிறது.
லோதா கமிஷன் பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு மற்றும் மாநில சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கிறது. அதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தை நேற்று நடத்தியது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் என்.சீனிவாசனின் மகள் ஆவார்.
டி.ஜெ.சீனிவாச ராஜ் (நகரம்), டாக்டர் பி.அசோக் சிகாமணி (மாவட்டம்) ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஆர்.எஸ்.ராமசாமி செயலாளராகவும், கே.ஏ.சங்கர் இணை செயலாளர் பதவிக்கும், என்.வெங்கடராமன் உதவி செயலாளராகவும் ஜெ.பார்த்தசாரதி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

