கோவை: சச்சின் டெண்டுல்கருக்கு சுதிர் குமார் சௌத்ரி, மகேந்திர சிங் டோனிக்கு சரவணன் ஹரி எப்படியோ அப்படி இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவின் வெறித்தனமான ரசசிகராக இருப்பவர் தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முகுந்தன்.
ஹார்திக் பெயரை 16 மொழிகளில் முகுந்தன் தமது உடலில் பச்சை குத்தியுள்ளார். அடிக்கடி சிகையலங்காரத்தை மாற்றிக்கொள்ளும் பழக்கமுடையவர் ஹார்திக். அப்படி அவர் புதிய முடியலங்காரத்துடன் தோன்றும்போதெல்லாம் முகுந்தனும் உடனடியாக முடிதிருத்தகத்திற்குச் சென்று தானும் அதே தோற்றத்திற்கு மாறிவிடுவார்.
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து ஏடாகூடமாகப் பேசியதால் ஹார்திக்கிற்கு சில மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
அப்போது, ஹார்திக் அந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு, மீண்டும் கிரிக்கெட் திடலுக்குத் திரும்ப வேண்டிக்கொண்டு, கோவிலுக்குச் சென்று மொட்டையடித்துக் கொண்டார் முகுந்தன்.
ஹார்திக்கைப் பலமுறை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள முகுந்தன், அண்மையில் தர்மசாலாவில் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோத இருந்த முதல் டி20 ஆட்டத்தைக் காண தம் நண்பருடன் சாலை மார்க்கமாகக் கிளம்பினார்.
கிட்டத்தட்ட 2,000 கி.மீ. பயணம் செய்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரில் சாலை விபத்தில் சிக்கி, இவர் படுகாயமடைந்தார்.
முதலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், பின்னர் அங்கிருந்த மெட்ரோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனக் கூறினர்.
இந்தச் செய்தி ஹார்திக்கின் காதுகளை எட்ட, அவர் துடிதுடித்துப் போனார். போட்டி நடக்கும் இடம் 3,000 கி.மீ. தொலைவில் இருக்கும் நிலையில் முகுந்தன் ரயிலில் வராமல் சாலை மார்க்கமாகக் கிளம்பியது அவருக்கு வருத்தமளித்தது.
தம்முடைய ரசிகருக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றெண்ணிய ஹார்திக், முகுந்தனுக்கான மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். சிகிச்சைக்குப் பின் கடந்த 21ஆம் தேதி முகுந்தன் கோவை திரும்பினார்.
தற்போது ஓய்வில் இருந்து வரும் அவர் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை வீட்டில் இருந்தே பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மீண்டும் அரங்கிற்குச் சென்று விளையாட்டைப் பார்க்கும் நாள் எப்போது வருமோ என அவர் மனம் ஏங்கலாம். அவரை எதிர்பார்த்து ஹார்திக் பாண்டியாவும் காத்திருக்கக்கூடும்.

