காற்பந்து: களமிறங்கத் தயாராகும் மானே

காற்பந்து: களமிறங்கத் தயாராகும் மானே

1 mins read

லண்டன்: லிவர்பூல் காற்பந்துக் குழுவின் முன்னணித் தாக்குதல் ஆட்டக்காரரான சாடியோ மானே, காயத்தில் இருந்து குணமடைந்து, முழு உடல்தகுதியுடன் இருப்பதால் ஷெஃபீல்ட் வென்ஸ்டே குழுவிற்கு எதிராக இன்றிரவு நடக்கவுள்ள இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் விளையாடுவார் என அந்தக் குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரயிறுதியில் நடந்த செல்சி குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆயினும், அந்த ஆட்டத்தின்போது காலில் காயமடைந்ததால் செனகல் நாட்டவரான மானே, வார மத்தியில் நடந்த எம்கே டான்ஸ் குழுவிற்கெதிரான லீக் கிண்ண ஆட்டத்தில் களமிறங்க முடியாமல் போனது.

மானேவும் டிவக் ஒரிகியும் பயிற்சியில் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட கிளோப், அதே நேரத்தில் ஷெர்டான் ஷாக்கிரி இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்றும் சொன்னார்.

தொடர்ந்து ஏழாவது வெற்றிக்கு லிவர்பூல் குறிவைத்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தமட்டில் சொந்த அரங்கில் ஆடுவது மட்டுமே ஷெஃபீல்ட் குழுவிற்குச் சாதகமான அம்சம் என்றார் கிளோப்.

"நாங்கள் முன்னணிக் குழுவாக பார்க்கப்படுகிறோம். ஆயினும், அவ்வாறு நடந்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை. முதன்முறையாக நாங்கள் ஷெஃபீல்ட் அரங்கிற்குச் செல்கிறோம். அங்கு விளையாடவும் ஆர்வமாக இருக்கிறோம்," என்றும் அவர் சொன்னார்.

இன்றிரவு நடக்கும் இன்னோர் ஆட்டத்தில், தொடர்ந்து சொதப்பி வரும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், சௌத்ஹேம்டன் குழுவை எதிர்கொள்கிறது. வேறு இரு ஆட்டங்களில் செல்சி-பிரைட்டன் குழுக்களும் மான்செஸ்டர் சிட்டி- எவர்ட்டன் குழுக்களும் பலப்பரிட்சை நடத்தவிருக்கின்றன.